Monday 13 March 2017

பெண் என்ற பெருமை ! - அ.பரிவழகன் – Proud to be Women – Parivazhagan

நம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது. இதைப்  பலநேரம் நாம் உணராததும், மதிக்காததும் பல அவலங்களை, கொடுமைகளை பெண் சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் ஜீவாத்மா பெண்தன்மை கொண்டது, பாரத அன்னைப்  பலநேரம் தன் கண்களில் உத்திரம் வடியுமளவிற்குப் பெண்ணிற்கு ஏற்படும் சமூக,பொருளாதார,பாலியல் கொடுமைகள் இன்றும் ஏராளம்.


மனிதகுலம் பல நிலைகளில் வளர்ந்து விட்டது, வானையே வளைக்கும் அளவிற்கு மெருகேறிவிட்டது, என்றெல்லாம் வர்ணித்தாலும் பெண் என்றுமே இரண்டாம் நிலை தான், என்ற மனோபம் இன்றும் வேரூன்றியுள்ளது. சம உரிமை என்பதைத்தாண்டி சமூகக் கடமை என்ற  நிலையில் வந்து நிற்கிறோம். சமூகக் கடமை என்பது பெண்ணின் கல்வியில் தொடங்கி திருமணத்தில் பரிணமித்து சுய கௌரவம்’ என்பதில் முடிய வேண்டும்.

ஒரு காலத்தில் கள்ளிப்பாலுக்குக் காவு கொடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் வாழ்க்கை இன்று நாகரிக உலகம் என்று கூறப்படும் நம் காலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஆசிட் வீச்சிற்கும் , காதல் மிரட்டல்களுக்கும் பலியாவது காலத்தின் கொடுமையா ? நம் வளர்ச்சியின் விஷமமா ?      
  
தீபம் என்பது இருளை விரட்ட மட்டுமல்ல, பல தீபங்களில் ஒளி ஏற்றவும் தான். பெண் என்பவள் கற்கும் கல்வி , ஒழுக்கம் , தைரியம் , தன்னம்பிக்கை , உழைப்பு ஒரு குடும்பத்தையே வழிநடத்தும், சிறந்த தலை முறையை உருவாக்கும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும்ஒரு குடும்பத்தின் சக்தி ; ஒரு நாட்டின் சக்தியாக மாறும்.

உயிர்களின் பிறப்பில் ஓர் உயரிய தன்மையான உயிர்களின் தோற்றம் என்பது பெண்மையின் கருணையாலே நடக்கிறது, உயிர்களின் வாழ்க்கைத் தொடர்ச்சி என்பது பெண்மையின் மிகப்பெரிய இயற்கைப்பணி, இயற்கைக்  தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கும் வரம் ! பெண் இயற்கையின் மகள் ; ஆணின் நிழல் ஆகவே பெண் என்பவள் பிறகும் பொழுதே பெருமைப் பார்க்கப்படுகிறாள் !

பெண் என்ற ஒற்றைக் காரணத்தால் எத்தனை எத்தனை இன்னல்கள் ; உதாசீனங்கள் ; கேலிகள் ; மனித மிருகங்களின் கோரப் பார்வைகள் ; பாலியல் துன்பங்கள் ; வாய்ப்பிழப்புகள் ; எனப் பட்டியல் நீளும் இத்தனையும் கடந்து நிற்கும் ஒரு போராட்ட வாழ்வே, ஒரு சாதனைதான்.

பெண்மையைப் போற்றுவது நம் கடமை,
அதுவே நம் பெருமை !
இனி எப்பொழுதும் ‘சரி நிகர்ச் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே !

No comments:

Post a Comment