Saturday, 9 September 2017

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய 125 ஆம் ஆண்டு - Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary

நாளை (11.09.2017) சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிகாகோவில் நம் பாரதம் பற்றியும் இந்துமதம் பற்றியும் உரை நிகழ்த்திய 125 ஆம் (1893 - 2017) ஆண்டு பெரு நிகழ்வு ! 
Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary (11.09.1893)

இந்நேரத்தில் நாம் இரண்டு தமிழர்களை நினைவில் கொள்ள வேண்டும் ...
தனக்கு வந்த அழைப்பை சுவாமி விவேகானந்தரிடம் கொடுத்து தனக்கு பதில் அமெரிக்காவில் நடக்கும் சர்வ சமய மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அதற்கு பொருளுதவியும் செய்த ராமநாதபுரம் மன்னர் திரு.பாஸ்கர சேதுபதி !

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க செல்ல பலரிடம் பொருளுதவி பெற்றுத்தந்த திரு.அளசிங்கர் ! , அளசிங்கர் விவேகானந்தருக்கு பல்வேறு உதவிகளை மிகுந்த அன்போடு செய்தவர். விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து அளசிங்கருக்கு எழுதிய கடிதம் இன்றும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கல்வெட்டாக காட்சிக்கு உள்ளது !
அ.பரிவழகன்

#SwamiVivekananadaChicagoTalk125thAnniversary


Saturday, 6 May 2017

“தமிழ் மொழியும்” மோடி அரசும், திருக்குறள் முதல் கீழடி வரை – அ.பரிவழகன் - Tamil Language and Modi Government


2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. நாங்கள் எல்லாம், உங்களை ஜனாதிபதியாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அது தொடர்பான அறிவிப்பை, இன்று இரவே வெளியிட வேண்டும். அதனால், நீங்கள் உடனே, 'யெஸ்' அல்லது, 'நோ' என, பதில் சொல்ல வேண்டும். தே.ஜ., கூட்டணியில், 24 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் மத்தியில், ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம். கூட்டணியின் தலைவர் நான் என்பதால், உடனே, இந்த விஷயத்தில், முடிவெடுத்தாக வேண்டும். உங்களின் பதிலை சொல்லுங்கள்” என்று ஒரு குரல் அப்துல் கலாமிடம் கேட்க, “இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும்” என்றார் கலாம், பின் சில மணித்துளிகள் கழித்து “நான் ஜனாதிபதியாக பதவியேற்கத் தயார்” என்று கலாம் கூற அடுத்த15 நிமிடத்தில், கலாம் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட விஷயம், நாடு முழுவதும் பரவியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர், கலாமிடம் நேரடியாகப் பேசியவர் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் !
உலகம் போற்றும் ஓர் ஒப்பற்றத் “தமிழரை” நாட்டின் குடியரசுத் தலைவராக்கி  தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்த்த இயக்கம் பாரதீய ஜனதாக் கட்சி ! 

தமிழ் பணியில் தாமரை !

பா.ஜ.க வின் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. தருண் விஜய்  நெடுங்காலமாக, பல ஆண்டுகளாக நம் தாய்த் தமிழ் மொழிக்கு அரும் பெரும் சேவை யாற்றி வருகிறார். தருண் விஜய்  அவர்களின் முயற்சியால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர், லூதியானா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக நடத்தப்படுகிறது, மேலும் தன்னுடைய சுய முயற்சியின் காரணமாக திருக்குறளை ஹிந்தி மொழியில் அச்சடித்து விநியோகித்து வருகிறார் “திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்களின் வழிகாட்டியாகவும், மக்களிடம் மனிதாபிமானத்தை வலியுறுத்துவதாகவும் திருக்குறள் அமைந்துள்ளது” என்று நம் தமிழ் மொழியின் கொடையான திருக்குறளின் மீது நீங்காத பற்று கொண்டவராக இருக்கிறார் தருண் விஜய் ! மேலும் நம் தமிழுக்குச் சிகரம் வைத்தாற் போல ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகளின் தினமாகக் கொண்டாட வேண்டும்” என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் !

காஷ்மீர் மாநில முதல்வராக முப்தி முகம்மது சையத் இருந்த பொழுது அவரது வீட்டில் அவரை சந்தித்து திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் காஷ்மீர் மாநிலப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் திருக்குறளைச் சேர்ப்பதற்கான முயற்சிகளையும், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு மற்றும் திருக்குறளை உருது மொழியில் மொழி பெயர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் தருண் விஜய் ! 

கங்கைக் கரையோரம் திருவள்ளுவருக்குச் சிலை ! 

“திருவள்ளுவர் திருநாட்கழகம்” அதன் தலைவர் சாமி தியாகராஜன் அவர்களின் முயற்சியால் ஹரித்வாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவரின் கற்சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான சிலை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தயாரிக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், பாஜக எம்.பி. தருண் விஜய்யிடம் வழங்கினார், சென்னையில் நடந்த அந்நிகழ்வில் பேசிய, தருண் விஜய்  “திருக்குறளை வட மாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளாமல் போனது துரதிருஷ்டமான விஷயம். இப்போது அதற்காக நிறைய பேர் வருத்தப்படுகின்றனர். கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகிறேன். அதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது” என்றார். 

தமிழும் மோடி அரசும் ! 

மத்திய சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியைக் கட்டயமாகப் படிக்கவேண்டும். (தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்)

பத்தாம் வகுப்பு சம்ஸ்கிருத பாடத்திட்டத்தில் திருக்குறளைச் சேர்த்தது.

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களும் திருவள்ளுவர், திருக்குறள் பற்றி கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்து அதைச் செய்து காட்டியது.  

சங்க இலக்கியங்கள் , திருக்குறள் பற்றி NCERT (National Council of Educational Research and Training) புத்தகம் வெளியிட்டது. 

ஜல்லிக்கட்டு வீர விளையாடிற்கு தடை விதித்த தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு மத்தியில், ஒரே நாளில் அனைத்து சட்ட சிக்கல்களையும் நீக்கி நம் தமிழக அரசிற்கு உதவி, தமிழ்நாடு சட்ட சபையில் சட்டம் இயற்ற வைத்த அரசு மத்திய மோடியின் அரசு ! 


பாரதியின் பாசம் !

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை அம்மாநில அரசின் சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க வேண்டு மென்றும் , பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை மத்திய அரசின் பாரம்பரிய சின்னமாக்கும் முயற்சியிலும்  ஈடுபட்டுள்ளார், நம் தருண் விஜய் . இதற்காக, அவர் தனது மனைவி வந்தனாவுடன், பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசி அலுவலகத்தின் அமைப்பு செயலாளர் சந்திரசேகர், உட்பட மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் பாரதியார் இல்லத்திற்குச் சென்று, அங்கு வசித்து வரும் பாரதியார் சகோதரி லட்சுமி அம்மாளின் மகன் கே.வி.கிருஷ்ணன், அவரது மகன் கே.ரவிகுமார், மருமகள் பவானி ரவி குமார், பேத்திகளான ஜோதி ரவிகுமார் மற்றும் ஜெயந்தி முரளி உட்பட குடும்பத்தார் அனைவரையும் சந்தித்துப் பேசி, அவர்களிடம் அங்கு உள்ள பாரதியார் பயன்படுத்திய பொருட் களைப் பற்றியும், பாரதியார் பற்றியும் கேட்டறிந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு “ஆனந்த விகடனுக்கு” தருண் விஜய் அளித்த ஒரு பேட்டியில் (11/08/2014)... 

“நம்முடைய வரலாற்றில் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த இலக்கியங்களைக் கொடுத்துள்ளனர். இந்திய நாகரிகத்துக்கு தமிழர்களது நாகரிகம் பெரும் பங்களித்துள்ளது. தமிழ் அரசர்கள், ஞானிகள், கவிஞர்கள் போன்றவர்களின் பங்களிப்பினால் திருக்குறள் போன்ற அரிய வகை நூல்களைப் பெற்றுள்ளோம். ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் முதன்முதலாக கொடிபிடித்து மிகவும் கடினமான கடல்களைக் கடந்து, நமது நாகரிகம், கலாசாரம் மற்றும் மொழியையும் பரப்பியுள்ளனர். இந்தியாவில் இதுபோன்று வேறு யாரும் சாதிக்கவில்லை”, 

“மகாராஷ்டிராவில் சிவாஜி பெயர் மட்டும்தான் இருக்கும். எங்கேயாவது ராஜராஜ சோழன் பெயர் இருக்கிறதா? ஆனால், தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு சிவாஜி என்று பெயர் வைக்க தவறுவது இல்லை. ஏன் ஒரு சிறந்த நடிகர் வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகவே வலம்வந்தார். நமக்குள்ள இடைவெளியை போக்க ஒரு பாலம் அமைக்க திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறேன்” இவ்வாறு தமிழ், தமிழரின் பெருமையைப் பற்றிக் கூறியுள்ளார். 

கீழடி !

தற்பொழுது கீழடியில் அகழ்வாய்வுப் பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறது மத்திய அரசு. சிலர் வேண்டுமென்றே இதை மொழிப் பிரச்சனையாக , இனவாதப் பிரச்சனையாக மாற்ற முயல்கின்றனர். கீழடியில் அகழாய்வுப் பணிகள் 2013-14 வாக்கில் தொடங்கி இருதாலும், அது முழுவேகத்தில் ஆரம்பித்ததே ( மார்ச் - 2015 ) மோடி ஆட்சியில் தான். அதுவரை கீழடி அகழ்வாய்வுப் பணிகளுக்கு நிலம் கூட ஒதுக்காமல் , எந்த முயற்சியும் எடுக்காமல், அதைக் கேட்பாரற்றுக் கிடக்கவைத்திருந்தது தமிழக அரசு. (ஆதாரம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=1481626 ) ஆனால் அதே சமயம் அடுத்த மூன்றண்டுகளுக்கும் சேர்த்து நிதி 40 லட்சம் ரூபாய் ஒதுக்கி ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு தமிழர் தொன்மையான பண்பாட்டை உலகறியச் செய்ய முனைந்திருகிறது மத்திய மோடி அரசு ! அகழாய்வுப் பணிகளை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு (மொத்தமாக ஐந்து ஆண்டுகள் ) நீடிப்பு செய்து , முழுமையான ஒரு கள ஆய்வை மேற் கொள்ள இருக்கிறது இந்திய தொல்லியல் துறை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு திரு.வேதாச்சலம் என்ற தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரி, தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு கொந்தகை, வைகை ஆற்றுப் பகுதிகளை அகழாய்வு செய்யவேண்டும் என்று கூறியதை கண்டு கொள்ளாமல் விட்டது தமிழ் நாடு அரசு. இன்று அதே இடத்தில் சிறப்பாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்கிறது மத்திய அரசு.     
    
தமிழ் இலக்கிய அமைப்புகள்

தமிழ் மொழியின் இலக்கிய வளங்களை அனைவருக்கும் வாரி வழங்கும் விதமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு பா.ஜ.க வின் மூத்த தலைவர் “இல.கணேசன்” அவர்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை நடத்திவருகிறார், தினந்தோறும் பல நிகழ்வுகளில் விருந்தினராகப் பங்குகொண்டு தமிழ்மொழிக்கு தொண்டாற்றி வருகிறார். நாடு போற்றும் நல்ல இலக்கியவாதியாக அனைத்துத் தரப்பு மக்களும் கவரும் விதமாக தமிழ் மணம் பரப்பி வருகிறார். 

நன்மைகள் 

கொளச்சலில் துறைமுகம், நெடுஞ்சாலைகள், எனப் பல திட்டங்கள் நம் மத்திய அமைச்சர் “பொன்.இராதாகிருஷ்ணன்” அவர்களால் நம் தமிழ் நாட்டிற்கு வந்துள்ளன. தமிழ் நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதி உரிய நேரத்தில் நமக்கு கிடைக்க மோடி அரசின் துரித நடவடிக்கையே காரணம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர் மரணம், இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.       

தமிழ் மொழி மீது, தமிழர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ் நாட்டிற்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு சீரோடும் சிறப்போடும் செய்து வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் நல்ல தொரு மாற்றம் வரும் என்பதே மக்களின் எண்ணம்.  “இம்முறை, தாமரை !”           

- அ.பரிவழகன்-

Sunday, 30 April 2017

Sri Sankara - Sri Ramanuja Jayanthi !

இன்று ஸ்ரீ சங்கர - ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி !

நம் ஹிந்து சனாதன தர்மத்தின் இரு கண்கள் இவர்கள், சங்கரர் பிரிந்து கிடந்த ஹிந்து சமூகத்தை ஒன்று படுத்தியும், ராமானுஜர் நம் சமூகத்தின்
ஏற்றத்தாழ்வுகளை நீக்க போராடியும், நம்
நாட்டிற்கு அரும் பெரும் பங்காற்றியுள்ளனர், அவர்களுக்கு நம் இதயப் பூர்வமான நன்றிகள்
வணக்கங்கள்.

Monday, 13 March 2017

பெண் என்ற பெருமை ! - அ.பரிவழகன் – Proud to be Women – Parivazhagan

நம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது. இதைப்  பலநேரம் நாம் உணராததும், மதிக்காததும் பல அவலங்களை, கொடுமைகளை பெண் சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் ஜீவாத்மா பெண்தன்மை கொண்டது, பாரத அன்னைப்  பலநேரம் தன் கண்களில் உத்திரம் வடியுமளவிற்குப் பெண்ணிற்கு ஏற்படும் சமூக,பொருளாதார,பாலியல் கொடுமைகள் இன்றும் ஏராளம்.


மனிதகுலம் பல நிலைகளில் வளர்ந்து விட்டது, வானையே வளைக்கும் அளவிற்கு மெருகேறிவிட்டது, என்றெல்லாம் வர்ணித்தாலும் பெண் என்றுமே இரண்டாம் நிலை தான், என்ற மனோபம் இன்றும் வேரூன்றியுள்ளது. சம உரிமை என்பதைத்தாண்டி சமூகக் கடமை என்ற  நிலையில் வந்து நிற்கிறோம். சமூகக் கடமை என்பது பெண்ணின் கல்வியில் தொடங்கி திருமணத்தில் பரிணமித்து சுய கௌரவம்’ என்பதில் முடிய வேண்டும்.

ஒரு காலத்தில் கள்ளிப்பாலுக்குக் காவு கொடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் வாழ்க்கை இன்று நாகரிக உலகம் என்று கூறப்படும் நம் காலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஆசிட் வீச்சிற்கும் , காதல் மிரட்டல்களுக்கும் பலியாவது காலத்தின் கொடுமையா ? நம் வளர்ச்சியின் விஷமமா ?      
  
தீபம் என்பது இருளை விரட்ட மட்டுமல்ல, பல தீபங்களில் ஒளி ஏற்றவும் தான். பெண் என்பவள் கற்கும் கல்வி , ஒழுக்கம் , தைரியம் , தன்னம்பிக்கை , உழைப்பு ஒரு குடும்பத்தையே வழிநடத்தும், சிறந்த தலை முறையை உருவாக்கும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும்ஒரு குடும்பத்தின் சக்தி ; ஒரு நாட்டின் சக்தியாக மாறும்.

உயிர்களின் பிறப்பில் ஓர் உயரிய தன்மையான உயிர்களின் தோற்றம் என்பது பெண்மையின் கருணையாலே நடக்கிறது, உயிர்களின் வாழ்க்கைத் தொடர்ச்சி என்பது பெண்மையின் மிகப்பெரிய இயற்கைப்பணி, இயற்கைக்  தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கும் வரம் ! பெண் இயற்கையின் மகள் ; ஆணின் நிழல் ஆகவே பெண் என்பவள் பிறகும் பொழுதே பெருமைப் பார்க்கப்படுகிறாள் !

பெண் என்ற ஒற்றைக் காரணத்தால் எத்தனை எத்தனை இன்னல்கள் ; உதாசீனங்கள் ; கேலிகள் ; மனித மிருகங்களின் கோரப் பார்வைகள் ; பாலியல் துன்பங்கள் ; வாய்ப்பிழப்புகள் ; எனப் பட்டியல் நீளும் இத்தனையும் கடந்து நிற்கும் ஒரு போராட்ட வாழ்வே, ஒரு சாதனைதான்.

பெண்மையைப் போற்றுவது நம் கடமை,
அதுவே நம் பெருமை !
இனி எப்பொழுதும் ‘சரி நிகர்ச் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே !

Monday, 27 February 2017

ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் ! - அ.பரிவழகன்

இன்றோடு சரியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன நான் தமிழ் இலக்கியம் , சமூகம் , கலாச்சரம் சார்ந்து பேச, எழுத, செயல்படத் தொடங்கி, நான் கடந்து வரும் ஒவ்வொரு ஆண்டும் எனக்குப் பல நல்ல கற்பிதங்களையும், படிப்பினைகளையும் தினம்தோறும் வழங்கி வருகின்றன. சிலநேரம் வெற்றிகள் சிலநேரம் தோல்விகள் என என்னுடையப் பயணம் தொடர்கிறது, இறைவனின் அருளோடும் உங்களின் அன்போடும் !
-அ.பரிவழகன் 
27/02/2017Monday, 23 January 2017

மாணவர் புரட்சியும் , திராவிட அரசியலும் – அ.பரிவழகன் - Chennai Marina Students Protest and Dravidian Politics

மிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு வரலாற்றுச் சாதனை. லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் சென்னை மெரீனாக் கடற்கரையில் குழுமியது, தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி கொண்டது, தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழி பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஆதரவு கரம் நீட்டியது, என வளர்ந்தது போராட்டம். நடுங்கியது தமிழக அரசு மட்டுமல்ல, டில்லியும் தான் ! இப்படி புகழ் மிக்கப் பக்கங்களைக் கொண்டிருந்தாலும், அதன் அரசியல் சாயம் என்றோ வெளுத்துவிட்டது. தன்நெழுச்சியான மாணவர் போராட்டம், அமைதி வழிப் போராட்டம் என்று தொடங்கினாலும் அதனை வளர்த்துக் காத்தது இயக்கங்கள் சார்த்த அரசியல் தத்துவங்களே.

திராவிட சிந்தனை, பெரியாரிய சிந்தனை, கம்யூனிஸ சிந்தனை கொண்ட இயக்கங்கள், தேசிய நீரோட்டத்தை எதிர்க்கும் அமைப்புகள், தமிழ் தேசியம் பேசித் தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள், தேசப்பிரிவினையை ஆதரிக்கும் அமைப்புகள், பகுத்தறிவு-முற்போக்குச் சிந்தனை என்று கூறிக்கொள்ளும் அமைப்புகள், ஆகியோரின் சித்தாந்தப் பிரச்சாரக் கூடமாக, செலவில்லா மாநாட்டுத் திடலாக , சொர்க்கபுரியாக, ஆட்டம், பாட்டம், கேளிக்கைகள், மீடியாக்களின் ஆதரவு, என நேர்த்தியாக, கவனமாக வடிவமைக்கப் பட்டிருந்தது, மெரீனாக்  கடற்கரைப் போராட்டம். தொடங்கப்பட்டது என்னவோ ஜல்லிக்கட்டிற்காக, ஆனால் அதன் வளர்ப்பு, செழிப்பு எல்லாம் இந்திய எதிர்ப்பு ! தனித் தமிழ்நாடு ! மோடி - பன்னீர்செல்வம் ஒழிக !

ஆறு நாட்களில் (17-01-2017 முதல் 22-01-2017 வரை) முதல் இரண்டு நாட்களைத் தவிர மீதம் இருந்த அனைத்து நாட்களும் தீவிரமான மோடி – பன்னீர்செல்வம் எதிர்ப்புதான். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய மூவரையும் மிகவும் அநாகரிகமான முறையில், ஆபாசமாக, தவறுதலாகச் சித்தரித்து விமர்சனம் செய்வதுதான் பிரதானமாக இருந்தது. இந்தியா  வேண்டாம் ! தனித் தமிழ்நாடு வேண்டும் ! இந்திய தேசிய கொடி அவமதிப்பு என நீண்டது போரட்டத்தின் விஷக் கரங்கள். உண்மையாகவே ஜல்லிக்கட்டிற்காக போராட வந்த மாணவர் கூட்டம் செய்வதறியாது திணறியது.

அப்பாவியாக “தமிழன்” என்ற ஒரு அடையாளத்தை மட்டும் சுமந்துகொண்டு  ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கூடிய மாணவ-மாணவியர்களை, நாட்டிற்கு எதிராக, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக திருப்பியதுதான் “முற்போக்கு” இயக்கங்கள் என்று சொல்பவர்கள் செய்த வேலை. உணர்சயின் விளிம்பில் இருக்கும் மாணவனை–மாணவியை மேலும் தூண்டி விட்டு கைகளில் இந்திய எதிர்ப்பு வாசகங்களைக் கொடுத்து மோடியையும், பன்னீர்செல்வத்தையும் திட்ட வைத்தது, அப்பாவி இளைஞனுக்கு உணவு வழங்கி, மேடை போட்டுக் கொடுத்து, அவனின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, மூளைச்சலவை செய்து, தாய் நாட்டிற்கு எதிராக திருப்பி விட்டதுதான்,  பகுத்தறிவு - கம்யூனிஸ கூட்டதின் சீரிய செயல்பாடு.     
  .          
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற உண்மை நோக்கத்திற்காக கூடிய கூட்டத்திற்கு நாம் என்றும் தலை வணங்குகிறோம், நன்றியுணர்வோடு மதிக்கிறோம், அவர்களின் பலன் கருதாத அர்ப்பணிப்பு, போராட்ட உணர்வு, நிலையான புரட்சி ஆகியவைதான் ஜல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்கியது. மாணவர்களின், இளைஞர்களின் உண்மையான போராட்ட உணர்வை தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த இயக்கங்களின் மாயவலைகள் ஏராளம். மோடி எதிர்ப்பு என்ற பெயரில் நாட்டை இகழ்வதும், நாட்டைத் துண்டாட நினைப்பதும் முட்டாள்தனம்.

மாணவர் போரட்டத்தின் நோக்கங்கள் சரி என்றாலும் அதன் வழிமுறை, அது பயணித்த விதம் தவறு. நாம் ஜல்லிக்கட்டிற்கு, மாணவர் எழுச்சிக்கு என்றுமே ஆதரவு என்றாலும், தவறான போராட்ட வழிமுறைக்குத் துணை போகக்கூடாது, தவறான போரட்டங்கள் நாட்டின் பாதுகாப்பையே சிதைத்து விடும்.

வாழிய செந்தமிழ் ;
வாழ்க நற்றமிழர் ;

வாழிய பாரத மணித் திருநாடு !          

Sunday, 22 January 2017

தடம் மாறும் மாணவர் போராட்டம் ! - அ.பரிவழகன்

ஜல்லிக்கட்டு என்றால் என்ன?

ஜல்லிக்கட்டு என்பது புராதனமான நம்முடைய பாரதப் பண்பாட்டில் இருக்கும் வீர விளையாட்டு, நம் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் மாடுகளுடன் விளையாடும் விளையாட்டுகள் இருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் சமயத்தில் கிராமத்துக் கோவில்களில், காளைகளுக்கு கிராமத்து தெய்வங்களின் முன் பூஜை செய்து வழிபட்டு அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுப்புவர். ஒவ்வொரு ஊருக்கும் பொதுவாக ஊர் காளைகள், கோவில் காளைகள் என வளர்க்கப்படும். கோவில் காளைகள் , ஊர்காளைகள், தனிநபர் வளர்க்கும் காளைகள் என பலவும் வாடிவாசல் வழியாக துல்லிக்குதிக்கும். இவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்குவார்கள். நல்ல ஆரோக்கியமான உடல் வலிமையுள்ள மாடுகளை மட்டுமே போட்டிக்கு அனுப்புவர். மாடுபிடி வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆகியோரின் உடல் சரியான முறையில் இருக்கிறதா என்று மருத்துவ சோதனையும் நடைபெறும்.

தடம் மாறும் மாணவர் போராட்டம் !

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டம் மாணவர்களால் தொடங்கப்பட்டது என்றாலும் அதன் போக்கு நமக்கு சந்தேகங்களை அளிக்கின்றது, உண்மையிலையே இது பெரும் போராட்டம் தான் அனாலும் போராட்டம் என்ற பெயரில் பாரத பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரை தரம் தாழ்த்தி, மிகவும் அநாகரிகமாக, ஆபாசமாக  விமர்சனம் செய்வது, தனித்தமிழ்நாடு கோருவது  வருத்தமளிக்கிறது. மாணவர் போரட்டத்தின் நோக்கம் சரி என்றாலும் அதன் வழிமுறை தவறு. நாம் ஜல்லிக்கட்டிற்கு, மாணவர் எழுச்சிக்கு ஆதரவு என்றாலும் தவறான போராட்ட வழிமுறைக்கு துணை போகக்கூடாது.          

Wednesday, 11 January 2017

விவேகானந்தர் என்ற விதை ! - அ.பரிவழகன் - Swami Vivekananda by Parivazhagan


Why we Celebrate Vivekananda ? Swami Vivekananda Story Tamil - Parivazhagan-Tamil Motivational Video
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெருமை உண்டு நம் நாட்டிற்கு என்ன பெருமை என்று நமக்கே உணர்த்திய பெருமை விவேகானந்தரையே சாரும். விவேகானந்தருக்கு முன் வாழ்ந்த பல துறவிகள் தங்களை முழுவதும் ஆன்மீகப்  பாதையில் மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டனர், ஆனால் விவேகானந்தர் ஆன்மீகத்தை ஒரு கண்ணாகவும், சமூகத்தை மற்றொரு கண்ணாகவும் பாவித்தார்.   

நம்முடைய பாரதம் முன்னேற வேண்டுமெனில் அதன் சமூக அமைப்பில் இருக்கும் "பெண்ணடிமைத் தனம்" ஒழிய வேண்டும் என்று முழுவதுமாக நம்பினார், அதற்காக தொடர்ந்து பாடுபட்டார். ஓர் சமூகப் போராளியாக நம் நாட்டில் நடக்கும் இன்னல்களை எதிர்த்து தன் இறுதிமூச்சு உள்ளவரை போராடினார். வேதங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக்கியது முதல் "விதவையின் கண்ணீரைத் துடைக்காத ஒரு மதத்தை நான் மதமாகவே மதிக்கமாட்டேன்" என்று சிம்மக்குரல் முழங்கியது வரை அவரின் பயணம் நமக்கு ஒரு பாடம்.

நம்முடைய தமிழகத்திற்கும் விவேகானந்தருக்கும் மிக நெருக்கமான ஒரு பந்தமுண்டு, விவேகானந்தர் அமெரிக்க சென்று சொற்பொழிவாற்ற வேண்டும் என்று சொன்னவர் நம் ராமநாதபுரம் சேதுபதி மன்னர், அவருக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்தவர் சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த அளசிங்கர், விவேகானந்தர் அமெரிக்கவிலிருந்து கப்பலில் வந்து முதலில் கால் வைத்தது நம் பாரதத்தின் தமிழ் மண்ணில் தான், பின் சென்னையில் அவர் ஒன்பது நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்.

ஆங்கிலேயர் காலத்தில் நம் நாட்டைப் பற்றி பல தவறான கருத்துருவாக்கங்கள் மற்ற நாடுகளில் பரப்பப்பட்டன, இந்த சூழலில் தான் விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சர்வ மத மாநாட்டிற்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு  இந்து மதம் பற்றி உரை நிகழ்த்தினார், அதன் சாரம் உலக மதங்களை, மனிதர்களை அன்போடு அரவணைக்கும் தன்மையையே இந்துமதம் கொண்டுள்ளது , "உலக மதங்களுக்கெல்லாம் தாயாகிய புராதனமான இந்து மாதத்தில் இருந்து பேசுகிறான்" என்றார். விவேகானந்தர் அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நம் நாட்டின் புராதனமான ஆன்மிகம் , யோகா பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்த அதைக் கேட்ட பலர் நம் நாட்டின் மீது கொண்ட தவறான எண்ணங்களை கைவிட்டனர், ஓர் உன்னத குருவாக பலர் விவேகானந்தரை மதிக்கத் தொடங்கினர். 

இன்றும் உலகம் முழுக்க இருக்கும் இளைய சமுதாயத்திடம் ஒரு மிக பெரிய உந்து சக்தியாக  விளங்கும் சுவாமி விவேகானந்தர் நம் நாட்டின் பொக்கிஷம். தான் வாழ்த்த காலத்தில் வறுமை, தீண்டாமை, ஆங்கிலேயரால் ஏற்பட்ட கொடுமைகள் என அனைத்திற்கும்  எதிராக வலிமையான ஓர் அறிவாயுதம் ஏந்திய மகான், இந்து மதத்தின் ஞான பொக்கிஷங்கள் எல்லோருக்குமானவை என்று முழங்கிய ஆன்மிகப்பேரொளி , உலக மதங்களை நம் பாரதம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த யுக நாயகன் , நம் கலாச்சார வலிமையை முதலில் நமக்கும் பின் உலகுக்கும் உணர்த்திய வெற்றி வீரன் ,சமூக அவலங்களுக்குச் சாட்டையடி கொடுத்த உண்மையான சீர்திருத்தவாதி , வீரத்துறவி விவேகானந்தர் !

நம்மில் இன்றும் விதைக்கப்பட்டிரும் விதை ! .


விவேகானந்தர் பிறந்தநாள் - இந்திய தேசிய இளைஞர் தினம்
Swami Vivekananda Birthday - National Youth Day - January 12      

Sunday, 1 January 2017

ஜல்லிக்கட்டு தமிழரின் அடையாளம், பாரதத்தின் பெருமை – அ.பரிவழகன் - Jallikattu Tradition of India

அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் , புத்தாண்டு பலருக்குப் பல கனவுகளோடு விடிந்திருக்கிறது, ஆனால் இம் மண்ணில் மாடுகளோடு திரியும் பூர்வகுடிகளுக்கோ ஜல்லிக்கட்டுக் கனவுடன் விடிகிறது.  எங்கிருந்தோ யார் யாரோ வருகின்றனர் நமக்குக் கட்டளையிடுகின்றனர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதென்று. பாவம் கோழைகளுக்கும் , கோமாளிகளுக்கும் எப்படித் தெரியும் வீர விளையாட்டின் அருமை பெருமை.

ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரியம் மட்டுமல்ல, இம் மண்ணின் பாதுகாப்பு அரண் !. இம் மண்ணில்  வேளாண்மையும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் நாட்டுப் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டுப் பசுக்களின் இனவிருத்திக்கு ஆரோக்கியமான, வீரியமிகுந்த காளைமாடுகள் அவசியம். அப்படிப்பட்ட வீரியம் மிகுந்த தரமான காளைமாடுகளைத் தான் நாம் ஜல்லிகட்டுக்குப் பயன் படுத்துகிறோம். ஜல்லிகட்டுத் தடைபடும் பட்சத்தில் தரமான காளை மாடுகளை நாம் இழக்க நேரிடும். காளைமாடுகள் முறையாகப் பராமரிக்கப் படாமல் அவை அடிமாடுகளாகி அழிய நேரிடும். நாட்டுப் பசுக்களின் இனவிருத்திக்குச் சத்தான காளைகள் கிடைக்காது, ஆக தரமான மாடுகள் உற்பத்தியாகாது. இதன் விளையு நமக்கும், நம் வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான, ஆரோகியமான பால் கிடைக்காது, விளைவு ஊட்டசத்துக் குறைபாடு, நோய் !

எங்கிருந்தோ வந்த அந்நிய சக்தியான peta நம் பாரம்பரியத்தின் பெருமையை, கலாச்சார விழுமியத்தை தடை செய்யத் துடிப்பது ஏன் ? நம் நாட்டில் எத்தனையோ ஜீவராசிகள் உணவிற்காக, இறைச்சிக்காக வதைக்கப்பாடுகின்றன அதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் மிருக வதைக்கு எதிரானவர்கள் என்று கூறுபவர்கள் ஜல்லிக்கட்டை மட்டும் ஏதிர்ப்பது ஏன் ? நம் நாட்டில் வீரியம் மிகுந்த காளை மாடுகளின் இருப்பைத் தடுக்க நினைக்கும் முயற்சி இது, பசுவை தெய்வமாக மதிக்கும் நாடிது, குழலூதும் கண்ணனை நினைக்கும் பொழுதே அவனின் அழகிய பசுவும் நம் நெஞ்சை வருடும், நம்மை விடப் பசுவையும், களையையும் நேசிக்கும் ஓர் பண்பட்ட உயர்குடிச் சமூகம் வரலாற்றில் இல்லை. நாட்டுப் பசுக்களை அழிக்க நினைக்கும் அந்நிய சூழ்ச்சியின் திட்டமிட்ட சதி இது. ஜல்லிக்கட்டு தமிழரின் அடையாளம், பாரதத்தின் பெருமை. மண்ணையும், பாரம்பரியத்தையும், காக்க ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல். ஜல்லிக்கட்டு இம்முறை நடத்தப்பட வேண்டும், எதிரிகளின் சூழ்ச்சி வலைகளில் இருந்து சீறிப்பாயட்டும் நம் காளைகள் ! சீறிப்பாயட்டும் நம் வரலாற்றின் வீர விளையாட்டு.
                                    Click Video Link