Wednesday 21 October 2015

சனாதன தர்மம் - 8 - “ஸ்ரீ மத் பகவத்கீதை” நம்முடைய புனித நூல் - அ.பரிவழகன் - ! “Srimad Bhagavad Gita” is Our Holy Book

நம் சனாதன தர்மத்தின் கடவுளர்களைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள், ஞானப் பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நூலும் ஒன்றைப் போதிக்கிறது; ஓர் உயர்ந்த நெறியைக் கற்றுக் கொடுக்கிறது; ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு நூல் புனிதமானது; ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒரு நூல் முக்கியமானது அப்படி இருக்க நம் அனைவருக்கும் பொதுவான நூல் என்று எதைக் கூறுவது ? ஒவ்வொரு மொழியிலும் நம் கடவுள்களைப் போற்றி எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன, ஆகையால் பொதுவான நூல் என்று எதைக் கருதுவது ?
சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (திருமால் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), காணபத்தியம் (விநாயகர் வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), சௌரம் (சூரிய வழிபாடு), என நமக்குப் பிரதானமாக இருக்கும் ஆறு வழிபாட்டு முறைகளுக்கும் பொதுவாக விளங்குவது நான்கு (4) வேதங்கள், ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய இந்த நான்கு வேதங்களும் அனைத்து வழிபாட்டிற்கும் பொதுவானவை, நம்முடைய ஆறு வழிபாட்டு முறைகளிலும் இந்த நான்கு வேதங்களும் பயன்படுத்தப் படுகின்றன, எனவே இவை அனைவருக்கும் பொதுவானவை. ஒரு தனிப்பட்ட மனிதன், ஓர் எளிய மனிதன் என்று எடுத்துக் கொண்டால் அவனால் இந்த நான்கு வேதங்களையும் படிப்பது என்பது சற்று கடினம், எனவே இந்த நான்கு வேதங்களின் சாரமாக விளங்கும், நான்கு வேதங்களின் கருவாக விளங்கும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய, “ஸ்ரீ மத் பகவத்கீதை”யைப் படிப்பது எளிது. ஆகவே தான் நம் முன்னோர் “ஸ்ரீ மத் பகவத்கீதை”யை நம் புனித நூலாகப் பின்பற்றினர், நான்கு வேதங்களின் சாரமாக “ஸ்ரீ மத் பகவத்கீதை” விளங்குவதால் அதுவே நம்முடைய புனித நூல் !   

வேதங்களில் பல பகுதிகள் மறைந்துபோய்விட்டன, ஆனால் வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கபட்டிருக்கின்றன. உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களில் இருந்து வந்தவை, உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை, எல்லா உபநிஷதங்களின் சாரமும் இதில் இருக்கிறது. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம், பகவத்கீதையை பகவத்கீதா உபநிஷதம் என்றும் அழைக்கலாம். எல்லோருக்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை, எளியோர்க்கும்  விளங்கும்படி எளிமையாக பகவத்கீதை என்று செய்து வைத்தான்   கண்ணன் !    
                                        
அனைத்து வேதாந்தக் கருத்துகளையும், அனைத்து ஞான விளக்கங்களையும், அனைத்துத் தத்துவங்களையும், ஒப்பற்ற நெறிமுறைகளையும், அற சிந்தனைகளையும் விளக்கும் நூல் “ஸ்ரீ மத் பகவத்கீதை” [பகவத்கீதை என்பதற்கு பகவானின் கீதம், கடவுளின் பாடல் என்று பொருள்] எல்லாவற்றிற்கும் மேலாக “ஸ்ரீ மத் பகவத்கீதை” “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா”வால் இவ்வுலக ஜீவராசிகள் இன்புற்று வாழ வாரி வழங்கப்பட்ட அருளமுதம் !

நம்மால் (தமிழர்களால்) விரும்பப்படும் ஒரு நூலை, மற்ற மொழியினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், கன்னடர்கள் விரும்பும் நூலை மலையாளிகளும், தெலுங்கர்கள் விரும்பும் நூலை மராட்டியர்களும், அசாமியர்கள் விரும்பும் நூலை குஜராத்தியர்களும், ஹிந்தி பேசும் மக்கள் விரும்பும் நூலை மற்ற மொழிக்காரர்களும், மற்ற மொழிக்காரர்கள் விரும்பும் நூலை ஹிந்திக்காரர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இப்படி ஒவ்வொருவரும் மற்றவரின் நூலைத் தவிர்த்துவிட்டு, தங்களின் நூலே புனித நூலக வர வேண்டும் என்று விரும்புவர். ஆனால் அதேசமயம் நான்கு வேதங்களையும் அனைவரும் ஏற்றுக் கொள்வர், நம் பாரதம் முழுவதும் நம்முடைய கோவில்களின் வழியாக சமஸ்கிருதம் அனைவரையும் இணைக்கிறது, கலாச்சார ரீதியாக சமஸ்கிருதம் ஓர் இணைப்பு மொழி போல செயல்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் மொழியில், கோயில்களில் பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன, அதே சமயம் நம்முடைய நான்கு வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும், சமஸ்கிருதத்தில் இருப்பதால், சமஸ்கிருதம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒழுங்கு முறை போல, நம் பாரதத்தில் சமஸ்கிருத மொழியில் ஒலிக்கும் “சுப்ரபாதம்”தான் உலகம் முழுவதும் ஒலிக்கிறது.

அண்டை மாநிலங்களின் மொழிகளில் உள்ள ஏதேனும் ஒரு புனித நூலை நாம் ஏற்றுக்கொள்வோமா ? இல்லை நம்முடைய தமிழ் மொழியில் உள்ள ஏதேனும் ஒரு புனித நூலை நம் அருகில் உள்ள கேரளா, கர்னாடக, ஆந்திரா ஏற்றுக்கொள்ளுமா ? இது சந்தகமே.  ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் எண்ணற்ற ஞான நூல்கள் இருக்கின்றன, அதில் ஏதேனும் ஒன்றை “புனித நூல்” என்று அறிவித்தால் மற்றவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆகையால் தான் ஆறு பிராதன வழிபாட்டு முறைகளுக்குப் பொதுவான நான்கு வேதங்களை எடுத்துக் கொண்டு, நான்கு வேதங்களின் சாரமான “ஸ்ரீ மத் பகவத்கீதை” சனாதன ஹிந்து தர்மத்தின் புனித நூல் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

ஒட்டுமொத்தமாக அனைத்து இந்துக்களும் “ஸ்ரீ மத் பகவத்கீதை”யைப் புனித நூலாக ஏற்றுக்கொள்கின்றனர், காரணம் அது அனைத்து வேதங்களின் சாரமாக விளங்குகிறது !

“ஆன்மீகமே பாரதத்தின் முதுகெலுன்பு, அதுவே நம் நாட்டை 

ஒருங்கிணைக்கும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

1 comment: