Sunday 23 August 2015

ஆங்கிலேயர்களால் "முன்னேற்றம்" என்ற ஏமாற்று வேலை - அ.பரிவழகன் [Britishers Progress in INDIA a Big Fake]

பொதுவாகவே ஆங்கிலேயர்கள் வந்ததால்தான் தான் நம் நாட்டிற்கு பல முன்னேற்றங்கள் வந்தன, குறிப்பாக ரயில்வே, தபால், சில அறிவியல் தொழில்நுட்பங்கள், என்று பரவலாகப் பலரால் நம்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு, உண்மையல்ல. ஆங்கிலேயர்கள் இவற்றையெல்லாம் கொண்டு வந்ததற்குக் காரணம், தாங்கள் சுகமாக இருப்பதற்கு, நம் நாட்டு மக்கள் முன்னேற்றமடைய அல்ல.


இரயில்வே : ஆங்கிலேயர்கள் "இரயில்வேயை" ஏற்படுத்தியது, இந்தியா முழுவதும் ரயில்களை ஓடவிட்டது நம் மக்களுக்காக அல்ல, இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய நம் நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்க, அவர்களின் தொழில் துறைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை நம் நாட்டில் இருந்து கொள்ளையடித்துச் செல்வதற்காகவே.பின்னாட்களில் அது மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்தால் கூட, அதன் முக்கியப் பயன்பாடு ஆங்கிலேய ராணுவத்தை நாடு முழுவதும் விரிவடையச் செய்து நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதே. எளிதாக ராணுவத்தை மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று மக்களை,சுதந்திரப் போராட்ட வீரர்களை, ஆங்கிலய ஆட்சிக்கு எதிராகப் போராட விடாமல் தடுக்க இரயில்வே ஆங்கிலேயர்களுக்குப் பெரிதும் உதவியது.            

தபால் : நம் நாட்டில் நடக்கும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் நம் நாட்டில் இருக்கும் மற்ற ஆங்கிலேய அதிகாரிகள் தெரிந்துகொள்ளவும், கட்டளைகள் பிறப்பிக்கவும்,சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கைதுகளை தெரிந்து கொள்ளவும், நாட்டிற்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டவும், நம் நாட்டின் விவரங்களை இங்கிலாந்து இராணிக்குத் தெரிவிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதே தபால் துறை

அன்னியர்கள் வந்த பிறகு தான் இங்கு கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் வந்தன என்பவர்களுக்கு நம்முடைய பதில், உலகின் முதல் பல்கலைக்கழகம் நம் பாரத நாட்டின் தட்சஷீலத்திலும் (கி.மு 700), மற்றொரு பெரிய பல்கலைக்கழகம் நாளந்தாவிலும் இருந்தன, பின் நாட்களில் அவை முகலாயர்களால், அன்னியர்களால் அழிக்கபட்டன. ஆங்கிலேர்கள் இங்கு கல்லூரிகளை உருவாக்கியதற்கு முக்கிய காரணம், ஆங்கிலேர்களின் கீழ் வேலை செய்யும், இந்தியர்கள் ஆங்கிலக் கல்வியறிவற்று இருந்தனர், வெள்ளையர்களின் ஏவல் வேலை செய்யத் தேவைப்பட்ட இந்தியர்களுக்கு  ஆங்கில அறிவு கொடுப்பதற்காகவே தான் நம் நாட்டில் ஆங்கிலேயர்களால்  கல்லூரிகள் உருவாக்கபட்டன. ஏவல் வேலை என்றால் ஏதோ கீழ் நிலைப் பணி என்று பொருளல்ல, ஆங்கிலேய நிர்வாகத்தில் இந்தியா முழுவதும் இருக்ககூடிய நிர்வாகிகள் ஆங்கிலக் கல்வி பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் திட்டம் (ஆங்கிலத்தை உயர்வான மொழியாக சித்தரிப்பதற்கு) , முக்கிய நோக்கம் தங்களின் நிர்வாகத்தை தங்களுக்கு ஏற்றாற்போல் (புரியும் வகையில்) நடத்த, அவர்களின் தகவல் தொடர்புக்கு இது பெரிதும் உதவியது.

பட்லர் இங்கிலீஷ் (Butler English) என்ற பதம் உங்களுக்கு தெரிந்திருக்கும் இதன் பொருள் "அறை குறை ஆங்கிலம்" ஆங்கிலர்களிடம் வேலை செய்த இந்தியர்கள் அறை குறை ஆங்கில அறிவுடன் இருந்ததால், அவர்களிடம் பணியாற்றிய வேலையாட்கள் பேசிய ஆங்கிலத்திற்கு பட்லர் இங்கிலீஷ் என்று பெயர் வந்தது (குறிப்பாக சமையல் வேலை செய்பவர்கள்) .            

பின்னாட்களில் நம்மிடம் வேலை செய்யப் போகும் இந்தியர்கள் முழு ஆங்கில மொழி கற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.    கல்லூரிகளில் ஆங்கிலம் ; குறிப்பாக மேற்கத்திய வரலாறு , இங்கிலாந்தின் வரலாறு, பெருமைகள் , அறிவியல் இடம் பெற்றிருந்த அளவிற்கு நம் நாட்டின் பெருமைகள் , வரலாறுகள் , கல்விமுறை இடம் பெறவில்லை. இந்தியர்களை முழுவதும் ஆங்கிலம் கற்றவர்களாக ; முழுவதும் இங்கிலாந்தின் அடிமைகளாக மாற்றுவதே அவர்களின் கல்வியின் நோக்கம். கல்வியின் மூலமாக , கல்வியைக் காரணம் காட்டி, ஆசை காட்டி கிருஸ்தவ மதமாற்றமும் நடந்தது.

ஆங்கிலக் கல்வியால் மக்களின் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி, ஆங்கிலம் படித்தால் "பிரிட்டிஷ்" அரசில் அரசு வேலை என்று மோகம் காட்டி , ஆங்கிலதை மட்டுமே உயர்வான மொழி யென்று மக்களை நம்பவைத்து, ஆங்கிலம் பேசுகின்ற ஆங்கிலேயர்கள் மட்டுமே உயர்வானவர்கள் என்று மக்களை ஏமாற்ற அவர்களுக்குக் கல்வி நிலையங்கள் தேவைப்பட்டன அதன் விளைவே கல்லூரிகளின் தோற்றம். இதன் விளைவு ஆங்கிலம் கற்றவரை உயர்வானவர் என்று பார்க்கும் மனோபாவம் உருவானது, வளர்ந்தது, அது இன்று வரை நீடிக்கிறது

இந்தியாவில் அன்னியர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்கள் மிகச் சிறப்பாக இருந்திருந்தால் ஏன் நம் நாட்டின் பல தலைவர்கள் இங்கிலாந்து சென்று படிக்க வேண்டும் ? (மகாத்மா காந்தி,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, போன்ற பல தலைவர்கள் இங்கிலாந்து, அமெரிக்க சென்று படித்தனர்.)

கல்வி விஷயத்தில் ஆங்கிலேயர்களின் நிலை ஆங்கிலத்தை ஒரு ஆதிக்க மொழியாக  இந்தியர்களின் மனதில் விதைக்கவும், ஆங்கிலக் கல்வியும் மேற்கத்திய உடையும், வாழ்க்கை முறையும் இந்தியர்களை "இரட்சிக்க வந்த கடவுள்" போல ஒரு மாயத் தோற்றத்தையும் , பொய் புரட்டல்களையும் விதைக்கும் வண்ணமே இருந்தது.
இந்த மாய வலைகளில் பலர் சிக்கினர் சிக்கியவர்கள் ஆங்கிலேய கைகூலியாகினர் அவர்களுக்கு அரசு வேலையும் பட்டமும்,பணமும்,பதவியும் வழங்கப்பட்டன. சிக்காதவர்கள் ஆங்கிலம் மட்டும் கற்றுக்கொண்டு, அதை நம் நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு "போர்க் கருவி" போலப் பயன்படுத்தி போராடி, உயர்த்தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்து இன்று நம் முன் தேசத் தலைவர்களாக மிளிர்கின்றனர் !    

ஆங்கிலேயர்கள் தந்திரக்காரர்கள் இந்தியர்களிடம் ஆங்கிலத்தைப் புகுத்தி நம் நாட்டில் ஆங்கிலத்தால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வடக்கே இந்து-முஸ்லிம் வேறுபாட்டை பெரிதாக்கி குழப்பம் உண்டாக்கி , தெற்கே சாதி வேறுபாட்டையும் , பொய்த்துப்போன திராவிட இனவாத கோட்பாட்டையும் உருவாக்கி வளர்த்து, ஆரிய-திராவிட மோதல்களை உண்டாக்கி; எப்படி எல்லாம் ஒரு நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முடியுமோ அப்படியெல்லாம் உருவாக்கி ; நம் நாட்டின் செல்வ வளங்களை  எல்லாம் சூறையாடி, நமக்குள்ளே ஒருவரை ஒருவர் அடித்துகொள்ளும் வண்ணம் பிரித்தாளும் சூழ்சியைக் கையாண்டு; பல லட்சம் மக்களை சிறையில் தள்ளி, சித்தரவதை செய்து, கொலை செய்து, நம் நாட்டை வன்முறையால், நயவஞ்சகத்தால், முதுகில் குத்தி, ஆக்கிரமிப்பு செய்து ஆண்ட கூட்டமா நம் நாட்டிற்கு நன்மை செய்தது ?        
               
இந்தியர்களே உங்களின் உண்மையான வரலாறுகளைப் படியுங்கள் !