Friday, 25 December 2015

Happy Birthday Wishes to Atal ji - இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் "ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி"

91 st Birthday Wishes to former Prim Minister of India Shri Atal Bihari Vajpayee ji 
25 December 2015 - Nation is Proud  of you - "நாடு உங்களால் பெருமிதம் கொள்கிறது""உங்கள் விருப்பம் போல்,உங்களால் இந்தியா ஒளிர்கிறது"

TWO Great National Leaders We Can't Forget
Atal ji and Kalam ji
Saturday, 28 November 2015

“விருதைத் திருப்பித்தருவேன், நாட்டை விட்டு வெளியேறுவேன்” சகிப்புத்தன்மை ஒரு சாதாரண இந்தியனின் பார்வை – அ.பரிவழகன் - Intolerance in India - Parivazhagan


அரசாங்கத்தை எதிர்பதற்கு எல்லோருக்கும் ஒரு கரணம் இருக்கிறது, உரிமையும் இருக்கிறது, எதிர்க்கும் விதத்தில் எதிர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொருவரும் மாறு படுகிறார்கள். இன்று பலர் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கவேண்டும் என்ற நோக்கில் நம் நாட்டை அவமதிப்பது வருத்தமளிக்கும் செயல். விருதுகளை திருப்பி அளிப்பது, நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறுவது, நாட்டின் அமைதியை கெடுக்கும் ஒரு வழிமுறை. நம் நாட்டில் வழங்கப்படும் எந்த ஒரு உயரிய தேசிய, மாநில விருதும் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் சார்பாக, அரசின் மூலமாக வழங்கப்படுகிறது, இங்கு அரசு என்பது விருதுவழங்கும் இடத்தில்  இருந்தாலும் விருது “மாக்களின் சார்பாக” வழங்கப்படுகிறது, எந்த ஒரு கட்சியின் சார்பாகவும் வழங்கப்படுவதில்லை, அப்படியிருக்க ஒரு காட்சியின் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்த அரசின் விருதைத் திருப்பித்தருவது என்பது நாட்டு மக்களை அவமதிப்பதாகும். சகிப்புத்தன்மை பற்றி பேசும் அறிவுலக மேதைகள் ; நடிகர்கள் ; அரசியல்வாதிகள் நாட்டில் இதற்கு முன் நடந்த வன்முறைகள்; மோதல்களின் போதெல்லாம் வாய் மூடி இருந்தது ஏன்?  

நரேந்திர மோடியுடைய ஆட்சி வரும் முன் நாட்டில் நடத்த வன்முறைகளுக்கு எதிராக போராடதவர்கள் இப்பொழுது போராடுவது அரசியல் நோக்கத்திற்காகவே. தங்களைச் சமூக சீர்திருத்தவாதி என்று காட்டிக் கொள்ளவும், முற்போக்குவாதி என்று முன்மொழியவும் செய்யப்படும் ஒரு உத்தியே தவிர இதில் தேச நலன் எங்கு இருக்கிறது ? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவாளர்களே பெருவாரியாக விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர் தங்களை “நடுநிலையாளர்கள்” என்று கூறிக்கொண்டு.

நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறுபவர்கள், இந்த நாட்டிற்குச் செய்தது என்ன ? மக்களைத் தங்களின் விஷக் கருத்துக்களால் பிரிக்க நினைத்த சிலரால் நாடு பட்ட துயரம் ஏராளம்.

போபால் விசவாயுவின் கொடூரத்திற்கு மரணம் அடைந்தவர்களுக்கு இதுவரை மத்திய அரசு முறையான இழப்பீடு வழங்கவில்லை, குற்றம் சாட்டப்பட்ட “ஆன்டர்சன்” அமெரிக்க தப்பி சென்றதற்கு உதவிய ராஜீவ் காந்தியை எதிர்த்து யாரும் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

இந்திரா கந்தியின் மரணத்திற்குப்பிறகு தலைநகர் டெல்லியில் நடந்த “சீக்கியர்களின்” படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாரும் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

நாட்டில் இதுவரையில் நடந்து கொண்டு இருக்கும் “பெண்களுக்கு” எதிரான வன்கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பெண்ணிய வாதி எழுத்தாளர், கலைஞர் அல்லது ஒரு ஆண் எழுத்தாளர், கலைஞர்  என ஒருவர் கூடத் தன் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

அண்டை நாடான இலங்கையில் “தமிழர்களுக்கு” எதிராக நடந்த வன்கொடுமைகள், இனப்படுகொலைகள், மனித உரிமைமீறல்கள் என எந்த ஒரு கொடுமைகளுக்கும் நம் நாட்டில் எந்த ஒரு சமூக போராளி, முற்போக்கு வாதி என யாரும் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை, தன் விருதையும் திருப்பித்தரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் நடந்த கொடூரமான பல குண்டு வெடிப்புகள், மும்பை கலவரங்கள், தாக்குதல்கள் என எதையும் கண்டித்து ஒருவர் கூடத் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

கஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட, அடித்து விரட்டப்பட்ட “கஷ்மீர் பண்டிட்டுகள்” சொந்த நாட்டிலேயே இன்று வரை அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்காக யாரும் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

எல்லாவற்றிக்கும் மேலாக, நாட்டையே சீரழிக்கும், அண்ணா ஹசாரே முதல் அனைவரும் எதிர்த்த, கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றதிர்கே வித்திட்ட, இதுவரை நாட்டில் நடந்த பல கோடிக் கணக்கான ருபாய் மதிப்புள்ள “ஊழல்களுக்கு” எதிர்ப்புத் தெரிவித்து யாரும் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியல் ஹிந்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏன் யாரும் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை ?   

இவை சில மட்டுமே, இப்படி போராட வேண்டிய எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய சம்பவங்களுக்கு வாய் மூடி கள்ள மௌனம் காண்பித்து விட்டு இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறுவேன், விருதைத் திருப்பித் தருவேன் என்றால் இது யாரை ஏமாற்றும் வேலை. நயன்தார சேகல்களும் ஆமிர்கான்களும் மக்களை முட்டாள்கள் என நினைத்து விட்டார்களா ? இவர்களுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமும், பெருமையும், புகழும் இந்த நாட்டு மக்கள் கொடுத்தது. நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது இவர்களின் கடமை. விசுவாசம் இல்லை என்றாலும் பரவாயில்லை விஷமம் இருக்கக் கூடாது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த எத்தனையோ இராணுவ வீரர்கள் அவர்களின் குடும்பம் இன்று நாட்டில் இருக்கும் இடம் தெரியாது, தந்தையை இழந்த குழந்தைகள், கணவனை இழந்த இளம் விதவைகளின் துயரங்கள் வெளியில் சொல்லமுடியாது. நாட்டிற்காக அனைத்தையும் இழந்து நிற்கும் இவர்களே நாட்டை இகழ்ந்ததில்லை மாறாக தொடர்ந்து நாட்டிற்காகவே போராட உறுதியாக உள்ளனர் , ஆனால் நாட்டின் ஆனைத்து வசதிகளையும் சுகங்களையும் அனுபவித்த உங்களுக்கு என்ன அப்படியொரு வன்மம் நம் தாய்த்திரு நாட்டின் மீது.  

நம் இந்திய தேசம் என்பது பல மொழிகள், பல மதங்கள், பல பழக்கவழக்கங்களை கொண்ட மக்கள் வாழும் நாடு, இப்படிபட்ட ஒரு நாட்டை உலகின் எந்த மூலையில் தேடினாலும் கிடைக்காது. நம்மில் பல வேறுபாடுகள் இருபினும் நாம் ஒற்றுமையுடனேயே வாழ்கிறோம், காரணம் இம்மண்ணின் இயல்பு, தன்மை. இம்மண்ணின் தன்மை, அனைவரையும் இணைக்கும் இயல்பு, என்பது நம் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்த மதங்களால் உருவாக்கப்படவில்லை, காலம் காலமாக நம் நாட்டில் உயர்புடன் வாழந்து கொண்டிருக்கும் "இந்து தர்மம்" எனும் ஜீவ நதியால் உருவாக்கப்பட்டது.

ஏற்கனவே நம் அண்டை நாடுகள், மற்ற மேற்கத்திய நாடுகள் இந்தியா எப்பொழுது துண்டாகும், நாம் எப்பொழுது ஆதிக்கம் செலுத்தலாம் என்று கழுகின் கண் போல நம்மை கவனித்துக் கொண்டிருக்க, நம் நாட்டில் இருக்கும் சில சக்திகளோ நாட்டைத் துண்டாடும் செயலுக்குத் துணை போவது வருத்தமளிக்கிறது.  

தயவு செய்து நாட்டைப் பிரிக்காதீர்கள்.  

Saturday, 21 November 2015

நாட்டைக் கெடுக்கும் இரு பெரும் திருடர்கள் : மது, ஊழல் – அ.பரிவழகன் - Two big thieves spoiling the nation : Alcohol and Corruption


மது என்பது இன்று மகத்துவம் தரும் பொருள் அரசுக்கு !, நகரம் முதல் கிராமம் வரை மது இல்லாத விருந்துகளே கிடையாது என்ற நிலை, வாரி வழங்க அரசாங்கமே கடைதிறந்து ஊற்றிக்கொடுக்கிறது (கெடுக்கிறது). இன்று சிறுவர்கள் கூட மது குடிக்கும் அவல நிலை. எளிதில் கிடைக்கும் வகையில் இன்று தெருவிற்கு தெரு மதுபான கடைகள் முளைத்து விட்டன, கெட்டுப்போனது இளைய தமிழகம்.

2010ல் இந்தியா டுடேவில் வந்த கருத்துக் கணிப்பின்படி கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் 10% அதிகரித்துள்ளது என்றும், 30% பேர் மது அருந்துகின்றனர் என்றும் கூறுகிறது. 2010 லேயே இந்த நிலை என்றால் இப்பொழுது ? நினைக்கவே மனம் நடுங்குகிறது.

இன்று பெரு, சிறு நகரங்களில் இருப்போர், கிராமத்தில் இருப்போர் என அனைவரிடம் விஷச் செடியாக இப்பழக்கம் ஊடுருவி விட்டது. சென்னையில் நடக்கும் எந்த ஒரு விருந்தும் மது இல்லாமல் முடிவதில்லை, பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது நம் சமூகம் வெட்கப் பட வேண்டிய விஷயம்.  

மது அருந்துவது, புகை பிடிப்பது ஏதோ ஓர் உயர் கவுரவம் என்பன போன்ற போலியான ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. மது என்பது மதியை மயக்கி உடலைக் கெடுக்கும் என்பது மாறி போலியான சுகத்திற்கு அடிமையாவது ‘புதிய நாகரிகம்’ என அனைவரும் கைகளில் கோப்பையுடன் வலம் வருவது நம் தமிழ்நாட்டின் சாபக்கேடு. மதுவால் ஏற்படும் உயிர் பலிகள், உடல் நோய்கள், குடும்பப் பிரச்சனைகள், சாலை விபத்துகள் என அனைத்தும் நாட்டிற்கும், தனிமனிதனுக்கும் தீமையே.

மதுவால் மதிகெட்டுப் போனோ ரெல்லாம் அதன் தீமைகளை அறிவர் அறிந்தும் விடுபடாது அதனால் சிறைவைக்கப் பட்டு அடிமைகளாக வாழும் கொடுமை நம் கண் முன் நடக்கிறது. நாடும் நாமும் வெட்கப்பட வேண்டிய கொடுமை இது !    

ஊழல் : இன்று இந்த வார்த்தை தெரியாத மனிதர்களே கிடையாது நம் நாட்டில், புதிய புதிய ஊழல்கள் நாள்தோறும் செய்திகளில் வலம் வருகின்றன; அமைச்சர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை பெரியதும் , சிறியதுமாக தங்களால் முடிந்தவரை தவறுகளைச் செய்கின்றனர். இதுவரை நம் நாட்டில் நம்மவர்கள் கொள்ளையடித்த பணத்தை ஒழுங்காகப் பயன்படுத்தியிருந்தால் நம் நாட்டின் வறுமையையே ஒழித்திருக்கலாம் !

அரசாங்கம் அமைச்சர்களுக்கு பணம், வாகனம், அதிகாரம் முதலியன கொடுத்ததும் ஏன் இந்த ஊழல் ? அவர்கள் ஏன் கொள்ளையடிக்க வேண்டும் ? அரசியல் என்பதே சதுரங்கம் போன்றது, ஒரு முறை ஒரு காய் வெட்டப்பட்டால் அது உள்ளே வர, ஏதேனும் ஒரு சிப்பாய் கரையேறினால் தான் உண்டு. அதே நிலைதான் நம் அரசியல் வாதிகளுக்கும், ஒரு முறை ஒரு தொகுதியில் தோற்றுப் போனால் பின் அத்தொகுதியில் வெற்றிபெறுவது சாதாரண காரியமல்ல, ஏன் தன் கட்சியிலே அத்தொகுதி வேறு வேட்பாளருக்குப் போய்விடும் சாத்தியமும் உண்டு. எனவே இருக்கும் வரை நான்தான் ராஜா ! என்று முடிந்தவரை, முடியும்வரை கொள்ளையடிகின்றனர், மக்களை மறந்து உறவினர்களை விரும்புகின்றனர். தன் குடும்பம், உறவினர், தன் ஆதரவாளர் என பணம் பாதை மாறுகிறது, பின்னே இவர்கள் தானே தேர்தல் நேரங்களில் உழைப்பவர்கள் !. அதிகாரத்தில் இருக்கும் பொழுதே பணம், வீடு, தோட்டம் என வாங்கி குவித்து விட்டால் பின் தோற்றாலும் கவலையில்லை வசதியான வாழ்க்கையே தொடரும்.  

வீட்டில் இருக்கும் பணம் வீட்டை நடத்த ; வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகள் பின் வரும் தேர்தல்களில் செலவு செய்ய, இன்று அதையும் தாண்டி பல அரசியல் பிரமுகர்கள் பல கல்லூரிகளை நடத்துகின்றனர். பொறியியல், மருத்துவம், தொழிற்கல்வி என எந்தத் துறையையும் விடாமல், துறை வாரியாகக் கல்லூரிகளை கட்டி வற்றாத செல்வமான கல்வியை பணம் கொழிக்கும் மரமாக மாற்றி ‘கல்வித் தந்தைகளாக’ வலம் வருகின்றனர். பெரிய ஊழல்கள் மட்டுமே நமக்குத் தெரிய நாளிதல்களிலும், தொலைகாட்சிகளிலும் அவை பிரபலப் படுத்தப்படும். ஆனால் சிறு சிறு ஊழல்கள் கொள்ளைகள் நம் நாடு முழுவதும் தினமும் மறைவாக சில சுதந்திரமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவை அனைத்தும் சிலரின் ‘சுகமான ஆடம்பர’ வாழ்க்கைக்காகத்தான், மக்களின் வாக்குகள் விலை மதிப்பில்லாதவை அவை வீணாக்கப் படக் கூடாது, இனிவரும் காலங்களிலாவது அரசியல் தலைவர்கள் கடமை மறவாது பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஊழல் நம் நாட்டை விட்டு நீங்க வேண்டும்.                           

Monday, 16 November 2015

தலைமைப்பண்பு : தன்னம்பிக்கை தந்த பரிசு – அ.பரிவழகன் - Self Confidence & Leadership

நம்பிக்கை என்பது ஒன்றின் மீது முழுமையாகப் பற்றுக் கொள்வது, ஒன்றை மட்டுமே முழுமையாக நம்புவது. கடவுளின் மீது உள்ள உண்மையான பற்று கடவுள் நம்பிக்கையை உண்டாகும், நல்ல நம்பிக்கைகள், நல்ல சிந்தனைகளை உருவாக்கும் அது நல்ல செயல்களுக்கும், ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கும் வழிவகுக்கும். உண்மையான பற்று உறுதியைத் தரும், அதுவே தீய எண்ணங்களை உடைத்தெறிய உதவும்.

தலைமை சரியாக இயங்குமேயானால் அதன் கீழ் உள்ள நிலைகளில் பணிகள் சரியாக நடைபெறும், தலைமை என்பது தனக்கு கீழ் இருப்பவர்களை வேலைவாங்கும் பணியல்ல, சரியான வேலையை சரியான நபருக்குக் கொடுத்து அவர்களுக்கு ஊக்கமளித்து தட்டிக்கொடுக்கும் பணி. “எதை எவர் செய்தால் இச்செயல் இனிதே வெற்றிபெறும்” என்பதை அறிந்து அவர்களுக்கு சரியான பணியை அளித்தால் வேண்டும்.

தன்னோடு பணியாற்றுபவர்களை இத்தலைமை சரியான பாதைக்கு, வெற்றியை நோக்கி, அழைத்துச் செல்ல வேண்டும். தலைமையின் செயல்களை அனைவரும் நம்பும் வகையில், அதன் உத்தரவுகளை அனைவரும் மதிக்கும் வகையில் ஒளிவு மறைவின்றி அதன் செயல்பாடுகள் மனநிறைவையும், நம்பிக்கையையும், வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு சரியான தலைமை அனைவரின் செயல்பாடுகளையும் திறம்பட கவனித்தல் வேண்டும், அதன் முடிவுகள் தெளிவாக அனைவருக்கும் ஏற்றதாக, ஒருதலை பட்சமாக இல்லாமல், இருத்தல் அவசியம். ஒரு நல்ல தலைமை தன் நிறுவனத்தின் வெற்றி, நலன் பற்றி சிந்திப்பதாக இருத்தல் வேண்டும், அனைத்து முக்கிய ஊழியர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று முடிவுகளை எடுக்கும் பாங்கு தலைமையின் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தும்.

“ஒரு நல்ல தலைமையால் சாதாரண மனிதர்களைக்கூடத் திறைமை சாலிகளாக மாற்ற முடியும்”   

தலைமையின் வெற்றியை நோக்கிய பயணத்தில் தோல்விகள் ஏற்படும் பொழுது அதைச் சீரமைத்து மீண்டும் முன்னேற ஆற்றல் மிகுந்த மனிதர்கள் தலைமைக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். ஒரு புத்திசாலியான தலைமை என்றும் ஆற்றல் மிக்க மனிதர்களை தன்னோடு இணைத்துக் கொள்ளும், தலைமைக்குத் தன் நிறுவனத்தின் அனைத்துத் துறைகளைப் பற்றிய ஞானம் அவசியம். அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவு உள்ளவரால் மட்டுமே சிறந்த தலைவராக விளங்க முடியும்.

“நல்ல தலைவர்கள் சூழ்நிலையால் உருவாக்கப்படுகிறார்கள், வெற்றியோ தோல்வியோ அது தலைமையைப் பொறுத்தே அமையும்”

தலைமை என்பது தன்நிகரற்று விளங்க வேண்டுமாயின் அது தனித் தன்மையுடன் செயலாற்ற வேண்டும், ஒரு தலைமையின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் விரைவாகவும், விவேகமாகவும் இருத்தல் வேண்டும் ஆனால் அதன் சிந்தனைகள் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல தலைமை அனைவரின் உழைப்பிற்கும் தலைவணங்கி, ஊக்குவித்து, அனைவரோடும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். தலைமையின் கட்டமைப்பு கட்டுக்கோப்பானதாக சரிசமமான அதிகாரப் பகிர்வுடன் இருத்தல் வேண்டும்.

ஒரு சிறப்பான தலைமையால் மட்டுமே நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியும் அது வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி. தலைமையே தாரக மந்திரம் ! 
துன்பம் வரும்போதும் துவண்டுவிடாத நம்பிக்கை
இன்னல் வரும்போதும் இடிந்துவிடாத நம்பிக்கை
துயர் வரும்போதும் துணிச்சலான நம்பிக்கை நமக்கு வேண்டும்

Saturday, 14 November 2015

நம் நாடு : தள்ளாடும் தலைமுறை – அ.பரிவழகன்


இன்றைய இளைய சமுதாயம் ஓர் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது அது ஒன்றும் புதிய முயற்சியோ, சாதனையோ அல்ல, நம்மை நாமே அழிக்கும் செயல், இன்று நம் நாட்டில் நடக்கும் பெரும்பாலான பார்டிகளில், விருந்துகளில் மதுபானங்களின் புழக்கம் அதிகமாகிவிட்டது, மக்கள் அவற்றை சாதாரணமாகப் பயன்படுத்தும் அவல நிலை, எங்கே செல்கிறோம் நாம் ?. குளிர்பானங்களைப் போல குவிகின்றன மதுபானங்கள், ஆங்கிலேய ஆட்சியில் கள்ளுக்கடை மறியல்கள் நடந்த நாட்டில் இன்று மதுக்கடைகளுக்கு மாலை மரியாதை பாதுகாப்பு என பல அங்கீகாரங்கள்.

இன்றைய தலைமுறை மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் அவர்களின் வாழ்க்கை “தீயின் நடுவே பஞ்சு” போல பரிதாபமாக உள்ளது. நல்லதைச் சொல்ல வேண்டிய சமுதாயம் கெட்டதை மட்டுமே அதிகம் சொல்கிறது, இன்று நம் மாணவர்கள் மீடியாவின் வாசத்தில் வளர்கின்றனர், வீடியோ கேமையே விதியென நம்பி நேரத்தை வீணடிக்கின்றனர். மாணவர்களின் மூளை குறுக்கு வழியில்  பணம், எளிதில் புகழ், பிடிவாதம், மது எனக் குழம்பிபோய் இருக்க யார் காரணம் ?

எளிதில் பணம் சம்பாதிக்க வழிகள் ஆயிரம் என்று சொல்பவர்கள் உழைத்துச் சம்பாதிக்கச் சொல்லாமல் தவறு செய்யாவே தூண்டுகின்றனர், அடுத்தவரின் “உணவைப் பறிக்கவே” நம் இன்று முயல்கிறோமா ? என்ற எண்ணமும் எழுகிறது. நம் கல்வி முறையிலோ சுயநலம் தலைவிரித்து ஆடுகிறது, அடுத்தவனுக்கு இடமளிக்கதே ! என்பதே தாரக மந்திரம். கல்வியில் போட்டி இருக்கலாம்; கல்வி போர்களமாக இருக்ககூடாது. தன்னம்பிக்கை, பொதுநலம், அன்பு இவற்றை வளர்க்காமல் பணம் என்ற குதிரையின் மீது கல்வி சவாரி செய்ய யார் காரணம் ?

இன்று நம் நாட்டில் விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன காரணம் சகிப்பின்மை, ஈகோ, பணம். “நீ யார் ? என்னை கேள்வி கேட்க !” நானும் உன்னைப் போலவே அதிகமாகப் பணம் சம்பாதிக்கிறேன் என ஆண்-பெண் இருபாலரும் போடும் வீண் சண்டைகள் முடிவது வழக்குமன்றத்தில். பணம் நம் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மட்டுமேயன்றி நம் அடிப்படை வாழ்க்கையையே சீரழிக்க அல்ல.

“டிஸ்கோவில்” தொடங்கி “லிவிங் டு கெதரில்” தொடர்ந்து முடிவது “டிவோர்சில்” பிடித்தவரை வாழ்வோம் இல்லை என்றால் “குட்பை” இதுவே இன்றைய நவீன கலாச்சாரம். சாதாரண பிரச்சனைகளுக்கும் , சிறிய சண்டைகளுக்கும் கூட தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம் இப்படி தன்னம்பிக்கை இல்லாத சமூகத்தைத்தான் இன்று நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா ?.

இவற்றைத் தீர்க்க என்ன வழி ? ஒரே வழி பண்பான கல்வி !

நல்ல பண்பை வளர்க்கும் நீதி போதனைகள் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும், நம் கல்வி அன்பையும், பண்பையும் வளர்க்கும் விதமாகவும், சமுதாய நலன்களில் அக்கறை கொண்டதாகவும் இருக்க வேண்டும். கல்வியை மாற்றாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை. எனவே இனிவரும் காலங்களின் நம் தவறுகளை சரி செய்து சமூக முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் உயர்ந்த மனிதர்களாக இருக்க வேண்டியது நம் ஓவ்வொருவரின் கடமை. இதுவே நம் நாட்டிற்கு நாம் செய்யும் சிறப்பான சேவை. 

Monday, 9 November 2015

"தீபாவளி" அரசியல் - அ.பரிவழகன் – Deepavali Politics


தமிழ்நாட்டில் தீபாவளி வரும் மாதத்தில் மக்கள் உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயாராகி விடுவர், அதே சமயம் சில அமைப்புகள், சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தீபாவளிப் பண்டிகையை விமர்சித்தும், கேலிபேசியும், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவர். ஆனால் மக்கள் இவர்களின் பேச்சையெல்லாம் கேட்பதில்லை, ஆண்டுக்கு ஆண்டு தீபாவளி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

"நன்மை ஓங்கி தீமை அழியும்" செய்தியை உலகுக்கு உணர்த்தும் நன் நாளாக, ''எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்துத் தர்மத்தைக் காக்க நான் அவதரிப்பேன்" என்று ஸ்ரீ மத் பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியதற்கு ஏற்ப, ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மத்தை அழித்த நன் நாளாம் தீபாவளித் திருநாள்.

நரகாசுரன் என்ற கொடியவனை ஸ்ரீ கிருஷ்ணர் வதம் செய்து அழித்த நன் நாளே தீபாவளி, ஆகா அடிப்படையே தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் திருவிழா. நம் கலாச்சாரத்தின் அடிப்படையே தர்மம் தழைக்க வேண்டும் என்பதே அதை ஆண்டுதோறும் நமக்கு நினைவுப் படுத்தி நல்வழிப் படுத்தும் திருவிழா தீபாவளி. இப்படி நம் தர்மத்தின் அடி நாதமாக விளங்கும் ஓர் விழாவை வேண்டுமென்றே சிலர் முற்போக்கு என்ற போலி முக மூடியை அணிந்து கொண்டு விமர்சனம் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என்பவர்கள் தங்களின் சொந்த விழாக்களில், தங்கள் வீட்டின் நிகழ்ச்சிகளில், தாங்கள் சார்ந்த அமைப்புகளின், கட்சிகளின், சங்கங்களின் விழாக்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது ஏன் ? தங்களின் திருமண நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து கட்சி நிகழ்ச்சி வரை அனைத்திலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் 'முற்போக்குகள்' தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்தால் உடனே சமூக அக்கறையோடு பேசுவது விசித்திரமானது. தீபாவளியன்று " புகை புகை " என்று கூச்சலிடும் இவர்கள் நாளை முதல் இவர்கள் பயன்படுத்தும் புகையைக்கக்கும் வாகனங்களை விடுத்து நடந்து செல்வார்களா? தாங்கள் கட்சித் தலைவரின் பிறந்த நாளுக்குப் பட்டாசு வெடிக்க மாட்டார்களா ?     

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவான தீபாவளியை "இந்து தர்மத்தின்" விழா என்ற ஒரே காரணத்திற்காகவும், இந்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு இதை விமர்சையாகக் கொண்டாடுகின்றனர் என்பதற்காகவும், இந்து தர்மக் கடவுள்களை விமர்சனம் செய்ய வேண்டும்  என்ற நோக்கத்தோடு தீபாவளிப் பண்டிகையைச் சிலர் திட்டமிட்டுக் கேலி செய்கின்றனர்.

நம்முடைய இந்து தர்மத்தில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சிவராத்திரி, நவராத்திரி, சபரிமலை விரதம், பொங்கல் விழா, தீபாவளி, அம்மன் விரதம், கார்த்திகை, மார்கழிமாத விழாக்கள், அமாவசை விரதம், பௌர்ணமி விழா (இவை சில மட்டும்) என எத்தனையோ விழாக்களை நாம் பல ஆண்டு காலமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.     

இவ்விழாக்களுக்கெல்லாம் முதன்மையாக விளங்குவது தீபாவளி. நம் முன்னோர்கள் இத்தகைய பண்டிகைகளின், விழாக்களின் மூலம் நம் மக்களிடம் அன்பையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும், வளர்த்தனர். ஊருக்கு ஊர் "ஊர் கூடித் தேரிழுத்து" சாதி வேற்றுமை ஒழிய வழி வகுத்தனர். லோகமான்ய பாலா கங்காதர திலகரின் முயற்சியால் ஆங்கிலேய கொள்ளையர்களை எதிர்க்க நம் பாரத மக்களை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி "விநாயகர் ஊர்வல" நிகழ்ச்சி. அன்று முதல் இன்று வரை விநாயகர் ஊர்வலம் நம் மண்ணில் சிறப்பாக நடைபெறுகிறது.

உலவுத் தொழிலுக்கு நன்றி சொல்ல - பொங்கல்
நாம் செய்யும் தொழிலுக்கு நன்றி சொல்ல - ஆய்த பூஜை
கல்விக்கு நன்றி சொல்ல - சரஸ்வதி பூஜை
என ஒவ்வொரு விழாவிலும், ஓர் உட்ப் பொருளை மறைத்து வைத்தனர் நம் முன்னோர்.

நம் கலாச்சாரமே விழாக்கள் நிறைந்தது தான், ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனும் ஓர் பண்டிகை இருக்கும். பண்டிகைகளின் நோக்கமே மக்களை நல்ல ஆரோக்கியமான மனநிலையில் வைத்திருக்கத்தான், தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விலகி ஆரோக்கியமாக ஆன்மிகத்திலும் குடும்ப நலனிலும் ஈடுபடும் நோக்கத்துடனையே நம் மண்ணில் விழாக்கள் உருவாகின.  நம் மண்ணின் மரபு சார்ந்த அனைத்து விழாக்களையும் நாம் கொண்டாடி மகிழ்வோமாக.


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் ...     

Saturday, 31 October 2015

சனாதன தர்மம் - 9 - இந்து தர்மக் கோவில்களும் – தமிழக திராவிட அரசுகளும் – அ.பரிவழகன் – Hindu Temples and Tamilnadu Dravidian Governments


கடவுள் மீது நம்பிக்கையில்லாத கட்சிகளின் அரசுகள் நம் இந்துதர்மக் கடவுள்களின் கோயில்களை நிர்வகிப்பது சற்று விசித்திரமானது, குறிப்பாக திராவிட கட்சிகள். தமிழகத்தில் தீவிர இந்து விரோதப்போக்கை மேற் கொண்ட கட்சிகள் கோவில் நிர்வாகத்தை மட்டும் கைவிடவில்லை காரணம் உண்டியல் !, வருமானம். என்னதான் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கூறினாலும் ‘உண்டியல் வருமானம் தேவையில்லை’ என்று அவர்கள் கூறியதில்லை. “கோவிலில் இருந்து கிடைக்கப் பெறும் பெருச்செல்வம் அரசுக்கு வருவாய்; நாமோ அதை ஆண்டவனுக்கு அளிக்கும் காணிக்கை என்று நம்புகிறோம்” 
  
கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கும், மதச்சார்பற்ற அரசு என்று கூறுபவர்களுக்கும், எதற்கு நம் கோயில் வருமானம் ? சாமியைத் திட்டி ; பக்தனிடம் காசைப் பிடுங்கும் கூட்டம் இது. சரி ஆலயத்தையாவது ஒழுங்காக பராமரிக்கிரார்களா என்றால் அதுவும் இல்லை.

ஒரு தனியார் தமிழ் நாளிதழலின் (தினமலர்) இணையதளத்தில் சேகரித்து வைக்கபட்டிருக்கும் கோவில்கள் , இந்து தர்மம் பற்றிய அறிய தகவல்கள் கூட தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் இல்லை. கோவில்களில் இருந்து கிடைக்கபெறும் பெரும் வருமானத்தை அரசு கோவிலின் வளர்ச்சிக்கு, பக்தர்களின் வசதிக்கு, இந்து சமய வளர்ச்சிக்கு, மேம்பாட்டிருக்கு முழுமையாக செலவு செய்ய வேண்டும், மாறாக அரசின் மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ; விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று கூறுபவர்கள், ஏன் கோவில் வருமானத்தை அரசு எடுக்ககூடாது என்று கூறுவதில்லை ? கோவில் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இந்து கடவுள்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாதா ?.இந்து தர்மம், இந்தக் கலாச்சாரத்தின் தர்மம், இம்மண்ணின் தர்மம், நம் கடவுளை அரசு அலுவலகங்களில் வைக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் ?

கோவில் நிர்வாகத்தில் மட்டுமே தலையிட்டு வந்த அரசு இன்று கோவிலின் அன்றாட சடங்குகளில், பூஜைகளில், விழாக்களில் தலையிடுகிறது. ஆலயங்களின் சடங்குகள், விழாக்கள் போன்றவை அந்த அந்த கோவிலின் குருக்கள், பூசாரிகள், சமயப் பெரியோர்கள், மடாதிபதிகள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அனால் இன்று அரசின் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு கும்பாபிஷேகத்திற்கும், தேரோட்டத்திற்கும் நாள் குறிக்கின்றனர். கோவில் குளங்களும், நிலங்களும் புல், புதர் முளைத்துக் குப்பை மேடுகளாகக் கேட்ப்பாற்றுக் கிடக்கின்றன...

அர்ச்சனைக்குக் காசு ; ஆண்டவனை அருகில் தரிசிக்கக் காசு ; உண்டியலுக்குக் காசு ; சிறப்பு தரிசனம் ; அன்னதானம் ; கோவில் விழா என அணைத்திற்கும் காசு வசூலிக்கும் அரசு இந்து தர்மத்திற்கு ; கோவிலுக்கு ; பக்தர்களுக்குத் திருப்பி செய்த கைம்மாறு என்ன ? கோவிலில் பணத்தைக் கொட்டும் மக்களுக்கு அதை அரசு என்ன செய்கிறது என்று கேட்ப்பதற்கும் உரிமையுண்டு. அரசைப் பொறுத்தவரையில் கோவில்கள் முதலீடு இல்லாது வருவாயைக் கொட்டும் ஸ்தாபனங்கள்.  

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் இருக்கும் சிறப்பான ஏற்பாடுகள் உலகறிந்தவை ,பக்தர்களுக்கு வழங்கும் வசதிகள் ஏராளம், திருப்பதி தேவஸ்தானம் உலகின் பல இடங்களில் திருப்பதி கோவில் போன்று சிறிய வடிவில் கோவில்களை, திருப்பதி கோவிலின் தகவல் மையங்களை அமைத்து திருப்தி ஏழுமலையானின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. [உதாரணம் : சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில்] இப்படி இந்து சமய சேவையை சிறப்பாகவும், விரிவாகவும் செய்யும் திருப்தி தேவஸ்தானமும் அரசு சார்புடையது தான்.

நம் தமிழ்நாட்டில் புராதனமான , பழமையான பல கோவில்கள் இருந்தும் போதிய வசதிகள் இல்லாமல் இருகின்றன, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை, திருநெல்வேலி என ஊருக்கு ஒரு பெரிய கோவிலை வைத்துக் கொண்டு அவற்றை முறையாகப் பராமரிக்காமல் வைத்திருப்பது யாருடைய தவறு?   
         
கோவில்கள்தான் நம் கலாச்சாரத்தின் அடிப்படை நம்மைப் பொருத்தவரையில் அவை வழிபடும் இடம் மட்டுமல்ல நம் வாழ்வோடு பிணைந்த கலாச்சாரத்தின் விழுமியங்கள், அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை.

கோவில் சொத்தைச் சூரையாடினால் 
கோவிலின் வளங்களைக் கொள்ளையடித்தால்
கோவிலின் புனிதத்தைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டால்

அதற்கான தண்டனையை ஆண்டவன் நிச்சயம் கொடுப்பான் ! 

Wednesday, 21 October 2015

சனாதன தர்மம் - 8 - “ஸ்ரீ மத் பகவத்கீதை” நம்முடைய புனித நூல் - அ.பரிவழகன் - ! “Srimad Bhagavad Gita” is Our Holy Book

நம் சனாதன தர்மத்தின் கடவுளர்களைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள், ஞானப் பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நூலும் ஒன்றைப் போதிக்கிறது; ஓர் உயர்ந்த நெறியைக் கற்றுக் கொடுக்கிறது; ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு நூல் புனிதமானது; ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒரு நூல் முக்கியமானது அப்படி இருக்க நம் அனைவருக்கும் பொதுவான நூல் என்று எதைக் கூறுவது ? ஒவ்வொரு மொழியிலும் நம் கடவுள்களைப் போற்றி எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன, ஆகையால் பொதுவான நூல் என்று எதைக் கருதுவது ?
சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (திருமால் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), காணபத்தியம் (விநாயகர் வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), சௌரம் (சூரிய வழிபாடு), என நமக்குப் பிரதானமாக இருக்கும் ஆறு வழிபாட்டு முறைகளுக்கும் பொதுவாக விளங்குவது நான்கு (4) வேதங்கள், ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய இந்த நான்கு வேதங்களும் அனைத்து வழிபாட்டிற்கும் பொதுவானவை, நம்முடைய ஆறு வழிபாட்டு முறைகளிலும் இந்த நான்கு வேதங்களும் பயன்படுத்தப் படுகின்றன, எனவே இவை அனைவருக்கும் பொதுவானவை. ஒரு தனிப்பட்ட மனிதன், ஓர் எளிய மனிதன் என்று எடுத்துக் கொண்டால் அவனால் இந்த நான்கு வேதங்களையும் படிப்பது என்பது சற்று கடினம், எனவே இந்த நான்கு வேதங்களின் சாரமாக விளங்கும், நான்கு வேதங்களின் கருவாக விளங்கும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய, “ஸ்ரீ மத் பகவத்கீதை”யைப் படிப்பது எளிது. ஆகவே தான் நம் முன்னோர் “ஸ்ரீ மத் பகவத்கீதை”யை நம் புனித நூலாகப் பின்பற்றினர், நான்கு வேதங்களின் சாரமாக “ஸ்ரீ மத் பகவத்கீதை” விளங்குவதால் அதுவே நம்முடைய புனித நூல் !   

வேதங்களில் பல பகுதிகள் மறைந்துபோய்விட்டன, ஆனால் வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கபட்டிருக்கின்றன. உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களில் இருந்து வந்தவை, உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை, எல்லா உபநிஷதங்களின் சாரமும் இதில் இருக்கிறது. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம், பகவத்கீதையை பகவத்கீதா உபநிஷதம் என்றும் அழைக்கலாம். எல்லோருக்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை, எளியோர்க்கும்  விளங்கும்படி எளிமையாக பகவத்கீதை என்று செய்து வைத்தான்   கண்ணன் !    
                                        
அனைத்து வேதாந்தக் கருத்துகளையும், அனைத்து ஞான விளக்கங்களையும், அனைத்துத் தத்துவங்களையும், ஒப்பற்ற நெறிமுறைகளையும், அற சிந்தனைகளையும் விளக்கும் நூல் “ஸ்ரீ மத் பகவத்கீதை” [பகவத்கீதை என்பதற்கு பகவானின் கீதம், கடவுளின் பாடல் என்று பொருள்] எல்லாவற்றிற்கும் மேலாக “ஸ்ரீ மத் பகவத்கீதை” “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா”வால் இவ்வுலக ஜீவராசிகள் இன்புற்று வாழ வாரி வழங்கப்பட்ட அருளமுதம் !

நம்மால் (தமிழர்களால்) விரும்பப்படும் ஒரு நூலை, மற்ற மொழியினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், கன்னடர்கள் விரும்பும் நூலை மலையாளிகளும், தெலுங்கர்கள் விரும்பும் நூலை மராட்டியர்களும், அசாமியர்கள் விரும்பும் நூலை குஜராத்தியர்களும், ஹிந்தி பேசும் மக்கள் விரும்பும் நூலை மற்ற மொழிக்காரர்களும், மற்ற மொழிக்காரர்கள் விரும்பும் நூலை ஹிந்திக்காரர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இப்படி ஒவ்வொருவரும் மற்றவரின் நூலைத் தவிர்த்துவிட்டு, தங்களின் நூலே புனித நூலக வர வேண்டும் என்று விரும்புவர். ஆனால் அதேசமயம் நான்கு வேதங்களையும் அனைவரும் ஏற்றுக் கொள்வர், நம் பாரதம் முழுவதும் நம்முடைய கோவில்களின் வழியாக சமஸ்கிருதம் அனைவரையும் இணைக்கிறது, கலாச்சார ரீதியாக சமஸ்கிருதம் ஓர் இணைப்பு மொழி போல செயல்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் மொழியில், கோயில்களில் பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன, அதே சமயம் நம்முடைய நான்கு வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும், சமஸ்கிருதத்தில் இருப்பதால், சமஸ்கிருதம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒழுங்கு முறை போல, நம் பாரதத்தில் சமஸ்கிருத மொழியில் ஒலிக்கும் “சுப்ரபாதம்”தான் உலகம் முழுவதும் ஒலிக்கிறது.

அண்டை மாநிலங்களின் மொழிகளில் உள்ள ஏதேனும் ஒரு புனித நூலை நாம் ஏற்றுக்கொள்வோமா ? இல்லை நம்முடைய தமிழ் மொழியில் உள்ள ஏதேனும் ஒரு புனித நூலை நம் அருகில் உள்ள கேரளா, கர்னாடக, ஆந்திரா ஏற்றுக்கொள்ளுமா ? இது சந்தகமே.  ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் எண்ணற்ற ஞான நூல்கள் இருக்கின்றன, அதில் ஏதேனும் ஒன்றை “புனித நூல்” என்று அறிவித்தால் மற்றவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆகையால் தான் ஆறு பிராதன வழிபாட்டு முறைகளுக்குப் பொதுவான நான்கு வேதங்களை எடுத்துக் கொண்டு, நான்கு வேதங்களின் சாரமான “ஸ்ரீ மத் பகவத்கீதை” சனாதன ஹிந்து தர்மத்தின் புனித நூல் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

ஒட்டுமொத்தமாக அனைத்து இந்துக்களும் “ஸ்ரீ மத் பகவத்கீதை”யைப் புனித நூலாக ஏற்றுக்கொள்கின்றனர், காரணம் அது அனைத்து வேதங்களின் சாரமாக விளங்குகிறது !

“ஆன்மீகமே பாரதத்தின் முதுகெலுன்பு, அதுவே நம் நாட்டை 

ஒருங்கிணைக்கும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

Saturday, 10 October 2015

சனாதன தர்மம் - 7 - இந்து தர்மம்: தமிழ் மொழியும் எளிய மனிதர்களும் – அ.பரிவழகன் – Hindu dharma : Tamil language and Common Man

எண்ணிலடங்காத வழிமுறைகளையும் புனித நூல்களையும் அதனைத் தொடர்ந்து எண்ணற்ற ரிஷிகளையும், குருமார்களையும் கொண்டது நம் சனாதன தர்மம். ஒவ்வொரு இறை வழிபாட்டிற்கும் ஒரு நூல், ஒவ்வொரு பழக்கவழக்கதிற்கும் ஒரு நூல், ஒவ்வொரு பாரம்பரியத்திற்கும் ஒரு நூல். இப்படி எல்லையற்ற வழிமுறைகளைக் கொண்ட நம் இந்து தர்மத்திற்கு வழிகாட்ட எல்லையற்ற தத்துவங்கள் அவற்றை விளக்க எண்ணிலடங்கா நூல்கள்.

“ஒரே ஒரு நூல், ஒரே ஒரு கடவுள்” என்ற வழிமுறை இங்கு கிடையாது, அதற்கு மாற்றாக “எண்ணிலடங்கா ஞானப் பொக்கிஷங்கள், எண்ணிலடங்கா கடவுளர்கள்” என்ற முறையே நம் வழிமுறை. இதுவே நம் கலாச்சாரத்திற்கு ஏற்ற முறை. “பிறருக்கு ஏற்றது, நமக்கு நஞ்சாகலாம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர், ஆகா பிற நாடுகளுக்கு ஏற்ற வழிபாட்டு முறை நமக்கு சரிவராது.

நம்முடைய தமிழ் மொழியில் நம் பாரத கலாச்சாரத்தின் ஹிந்து கடவுளர்களைப் போற்றி, புகழ்த்து பல ஞானப் பொக்கிஷங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியில் பக்தி இலக்கியங்களின் பங்கு மிகப் பெரியது, பக்தி இலக்கியங்களை விட்டு விட்டு தமிழ் மொழியைப் பார்த்தால் அது வெறும் எழும்புக்கூடு போல தான் இருக்கும், பக்தி இலக்கியங்கள் தான் நம் தமிழ் மொழிக்கு அழகையும், வசீகரத்தையும், ஞானத்தையும், பெருமையையும், கம்பீரத்தையும் தருகின்றன. முற்காலத்தில் நம் முனிவர்கள், அறிவுஜீவிகள் கடவுளைப் போற்றிப் பல பாடல்களை இலக்கிய வடிவில் இயற்றி நம் தமிழுக்கும் இறைவனுக்கும் ஒரு சேரத் தொண்டாற்றியுள்ளனர். பக்தி இலக்கியங்கள் நம் தமிழ் தாய்க்கு ஜீவன் போன்றது.

பன்னிரு திருமுறைகள் (தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம்), கம்பராமாயணம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்யப்ரபந்தம் என இப்படியல் நீளும் (இவை சில மட்டுமே). திருக்குறள் நம் சனாதன தர்மத்தின் கலாச்சாரத்தில் தோன்றிய அறநூல், பிற்காலத்தில் அதை உலகப்பொதுமறை என்று அனைவரும் ஏற்றுக் கொண்டது நம் தமிழ் மொழிக்கும், நம் ஹிந்து கலாச்சாரத்திற்கும் பெருமையே !

நம் பாரத திருநாட்டில் இருக்கும் ஒவ்வொரு மொழியிலும் எண்ணற்ற நூல்கள் நம் கலாச்சரா கடவுளர்களைப் போற்றி பெருமளவில் இருகின்றன. நம் பரந்துபட்ட பாரதத் திருநாட்டில் இருக்கும் பல மொழிகளில் நம் ரிஷிகள், முனிவர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், புலவர்கள், எனப் பலரும் தங்களுடைய அறிவாற்றலின் காரணமாக தெய்வத்தின் துணையோடு தங்களின் தாய் மொழியில் நம் சனாதன இந்து கடவுளர்களைப் புகழ்ந்து, போற்றி பல பாடல்களை, இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

கிராம தேவதை வழிபாடு, கிராம தெய்வங்களின் வழிபாடு, கிராம கடவுளர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிய நாடுப்புறப்பாடகள் நம் பாரதம் முழுவதும் மிகவும் பிரபலம். கிராமத்து மக்கள், எளிய மக்கள் தங்களின் விருப்பமான கடவுள்களைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் ஏராளம், அவை ஏட்டில் எழுதப்படவில்லை, வாய்மொழியாகவே பாடப்பட்டன, பரப்பப்பட்டன.

காளியம்மன், மாரியம்மன், முத்துமாரி அம்மன், பவானி அம்மன், சீலக்காரி அம்மன், இராணி அம்மன், அய்யனார் சாமி, இருளப்பன் சாமி, கருப்ப சாமி, சுடலை மாட சாமி, மதுரை வீரன் சாமி, முனீஸ்வரன் சாமி, என இப்படியல் நீளும் (இவை சில மட்டுமே). இக்கடவுளர்களைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழி நாட்டுப்புறப் பாடல்களே, இவை நம் கிராமத்து எளிய மக்களை நம் கலாச்சாரத்தின் மீதும், நம் தர்மத்தின் மீதும் மிகுந்த ஈடுபாட்டோடும், பற்றுதலோடும், பக்தியோடும் இருக்க வைத்திருகின்றன . எளிய மக்களின், எளிய பாடல்கள் அவர்களின் தூய்மையான அன்பு இன்றும் தொடர்ந்து ஆண்டவனை அன்பால் மகிழ்விக்கின்றன. [உதாரணம்: நாடகத் தமிழ் உலகின் இமயமலை எனப்பாரடப்படும், பாமரர்களின் பழங்கதைகளை நாடகமாக்கிய “சங்கரதாசு சுவாமிகள்” (1867-1920), சில நாடகங்கள்: வள்ளி திருமணம், பக்தப் பிரகலாதா, இலவகுசா ]

நம் பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலும், மொழியிலும், எளிய மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பாடல்கள் பரந்து விரிந்து காணக் கிடைகின்றன. இம்மண்ணோடு மண்ணாக அவர்களின் பாடல்கள் கலந்து, இம் மண்ணுக்கு வலிமையைத் தருகின்றன. எளிய மனிதர்களின் வலிமையான தொண்டுதான் இன்றும் நம் இந்து தர்மத்தைக் காக்கின்றது. போற்றுவோம் அவர்களின் தொண்டினை !


நம்முடைய கலாச்சாரத்தின் காவலர்கள் நம் மன்னர்கள், ரிஷிகள் மட்டும் அல்ல, நம்முடைய குடும்பங்களும் அதில் வாழ்த்த எளிய மனிதர்களும் தான், அவர்கள் பல அறிய பெரிய சேவைகளை பெயர் கூறாது திறம்பட செய்துள்ளனர். அவர்களுக்கு என்றென்றும் நம் வணக்கங்கள், நன்றிகள் ! என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

Saturday, 3 October 2015

சனாதன தர்மம் - 6 - திராவிடக் கட்சிகளும், சாதிய அரசியலும் - அ.பரிவழகன் – Dravidian parties and Caste politics


நம் தமிழ்நாட்டில் இரண்டு விதமான அரசியல் பேசப்படுகின்றன ஒன்று பாரதம் தழுவிய தேசியம், இரண்டு திராவிடம் சார்ந்த இனவாதம். இதல் தேசியம் என்பது பாரதத்தின் அனைத்து மக்களையும் இணைக்கும் தேசிய நீரோட்ட அரசியல், திராவிட இனவாத அரசியல் தொடங்கப்பட்ட காலத்திலேயே தத்துவார்த்த ரீதியில் பொய்த்துப் போய்விட்டது. இருப்பினும் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அரசியல் மேடைகளில் மட்டும் வாழ்கிறது, சமூக தளத்தில் என்றோ பொய்த்துவிட்டது.  

சமூகச் சூழலில் யாரும் இன்று திராவிடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, திராவிடப் பாரம்பரியத்தில் இருந்து வந்த வாரிசுகள் இன்று திராவிடம் என்றால் என்ன ? என்று கேட்கின்றனர். "தமிழுக்காக" இந்தியைத் திட்டியவர்களின் பிள்ளைகள் இன்று ஆங்கிலக் கல்விமுறையில் இந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கின்றனர். கடவுளைத் திட்டியவர்கள், குறிப்பாக இந்துமத வழிபாட்டைத் திட்டியவர்கள் , கேலிபேசியவர்கள் இன்று ஏறாத கோயில் இல்லை, செய்யாத வழிபாடு இல்லை, பார்க்காத ஜோதிடர் இல்லை. திராவிடத்தின் அடிப்படைக் கொள்கையாக அவர்கள் சொல்வது சாதி ஒழிப்பு, ஆனால் "திராவிட"க் கட்சிகளின் ஆட்சியில் தான் சாதி அமைப்புகள், சாதி சங்கங்கள் தோன்றி, வளர்ந்து, செழித்து, ஆட்சியில் யார் அமர வேண்டும், யார் அமைச்சராக வரவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றன.    

சுய மரியாதைத் திருமணம் மூலமாக, சாதி விட்டு சாதி திருமணம் செய்வதன் மூலம் சாதியை ஒழிக்கலாம் என்றனர், ஆனால் சாதி விட்டு சாதி திருமணம் செய்தவர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது கணவர் எந்த சாதியோ அதே சாதியில் தான் பிள்ளைகளைப் பதிவு செய்தனர், செய்கின்றனர். சாதி தேவையில்லை என்ற ஒரு பிரிவு இருகின்றது அதில் இவர்கள் தங்களின் பிள்ளைகளைப்  பதிவு செய்யாதது ஏன் ? யார் யார் எல்லாம் சாதி ஒழிய வேண்டும் என்று அரசியல் மேடைகளில் பேசுகிறார்களோ, அவர்கள் எல்லாம் முதலில் தங்களின் பிள்ளைகளை, பேரன்களைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது எந்த சாதியையும் சாராதவர், சாதி தேவயில்லை என்று பதிவு செய்யத் தயாராகல்லூரிகளிலும், அரசு நிறுவனங்களிலும் "எந்த சாதியையும் சாராதவர்" என்று தனியாக சாதி சாராதவர்களுக்கு இட ஒதிக்கீடு கொண்டு வரத் தயாரா ?

சாதி ஒழிப்புப் பற்றி பேசும் திராவிடக் கட்சிகள் இதுவரையில் சாதி ஒழிப்பிற்குச் சட்ட ரீதியாகச் செய்த நடவடிக்கைகள் என்ன ? நடைமுறைப் படுத்திய சட்டங்கள் என்ன ? சமூகப் போராட்டம் என்று மக்களைத் திரட்டும் இவர்கள் சட்ட ரீதியில் சாதியை எதிர்க்காமல் மக்களை ஏமாற்றுகின்றனர்

ஒருவர் நினைத்தால் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு எளிதாக மாறிவிட முடியும், ஆனால் ஒரு சாதியில் இருந்து இன்னொரு சாதிக்கு மாற முடியாது. ஆகா மதத்தை விட வலிமையானது சாதி, அப்படிப்பட்ட சாதியை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யாத "திராவிடர்கள்" தான், இந்து மதத்திற்கு எதிராகப் போராடுகின்றனர்.

இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள் இன்றும் தங்களின்  சாதிய அடையாளங்களுடனேயே இருகிறார்கள். மேலும் தாங்கள் புதிதாக ஏற்றுக்கொண்ட மதத்தில் உள்ள பிரிவுகளிலும்பழக்கவழக்கங்களிலும் ஈடுபட்டு, பழைய சாதிய அடையாளத்தையும் சுமந்து கொண்டு குழப்பத்தில் இருகின்றனர். மதம் மாறியவர்கள் இன்னமும் சாதியைத் தொலைக்கவில்லை என்றால் அதற்கும் இந்து மதம் தான் காரணமா ? இப்படி மனிதர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற சாதியை எதிர்ப்பதற்குப் பதிலாக, இந்து தர்மத்தை எதிர்க்கின்றனர். காரணம் - இந்து தர்மம் மனிதனை நான்கு விதமாகப் பிரிக்கின்றது என்று நம் தர்மத்தின் மீது குறை கூறுகின்றனர்.     

இந்து தர்மம் சொல்லக் கூடிய நான்கு வர்ணங்களுக்கும் இன்றை நடைமுறையில் உள்ள சாதிப் பிரிவினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சாதிய உருவாக்கத்திற்கு மனித மனோபாவமே காரணம் கடவுள் அல்ல, மனிதனின் தவறுக்குக் கடவுள் எப்படி, கலாச்சாரம் எப்படி காரணமாக முடியும் ? இன்று நம் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் சாதிகள் இருக்கின்றன அதற்கு இந்து கடவுளா காரணம் ?   (விரிவாகப் பார்க்க -  பாரதத்தின் சாதிய முறை - http://parivazhagan.blogspot.in/2015/09/5-1-caste-system-in-india-1.html)

இனிமேலாவது சாதி ஒழிய வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்கள், சாதிக்கு எதிராகப் பேசுபவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயலாற்றினால் நல்லது, மாறாக இந்து தர்மத்தை குறை கூறி பிழைப்பு நடத்தினால், அரசியலில் , சமூகத்தில் தோல்வியைத் தழுவுவது நிச்சயம். Read more - http://parivazhagan.blogspot.in/2015/07/blog-post.html