Monday 15 December 2014

" மாதங்களில் நான் மார்கழி "

" மாதங்களில் நான் மார்கழி "
- ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா-
(ஸ்ரீ மத் பகவத் கீதை - 10:35) 

தொடங்கிவிட்டது மார்கழி மாதம் ! (இன்று முதல் -16.12.2014)
கோதை நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 


        "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்" (3 வது பாடல் )

பொருள்:வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய குவளை மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி (இடையர்கள்) குடம் குடமாக பால் கறக்கும் வள்ளல் தன்மை உடைய பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க நாம் பாவை நோன்பு மேற்கொள்வோம்.

ஒருநாளின் ஒவ்வொரு மணித்துளியும் இறைவணக்கத்துக்கு உகந்தது என்றாலும் குறிப்பிட்ட நாழிகைகளை மட்டும் இறைவனுக்கென்றே ஒதுக்கியிருப்பார்கள். அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இறைவணக்கத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நேரம்.

புள்ளினங்கள் கவிபாடி உலகத்தைத் துயிலெழுப்பும் அதிகாலை, அற்புதமானது. மனதில் சலனங்கள் ஏதுமின்றி இறைவனோடு ஒன்றுவதற்கு ஏற்ற பொழுது, இதைவிட வேறென்ன இருக்கமுடியும்? அதனால்தான் அந்த அதிகாலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று முதன்மைப்படுத்தினார்கள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. அந்த மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதேநேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

மார்கழியில் அதிகாலை துயிலெழுவதும், வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் நல்லவண்ணமாய் இருக்கும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வன்மைப்படுத்தும்.

மார்கழியில் சுபநிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. குடியானவர்கள், தை மாதத்தில் வருகிற பொங்கலுக்குத் தேவையான தானியங்களையும், கரும்பு, மஞ்சள் முதலான பொருட்களையும் அறுவடை செய்து வீடுகளுக்குக் கொண்டுவரும் பணியில் மார்கழி மாதம் முழுவதும் செலவிடுவார்கள். அதனால் அந்த மாதத்தில் சுப நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சுபநிகழ்வுகளைத் தவிர்த்த மக்கள், இறைவழிபாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்கியிருப்பதும் இந்த மார்கழி மாதம்தான்.
"காதலன் கண்ணனையே கணவனாகப் பெற்ற பக்தை ஆண்டாள்" 
ஆண்டவனையே அன்பால் ஆண்டதால் கோதை நாச்சியார் 
"ஆண்டாள்" என்று அழைக்பெற்றார்


No comments:

Post a Comment